இந்தியா மற்றும் சீனாவிற்கு பயணம் மேற்கொள்ளும் பிரித்தானிய வெளிவிவகாரத்துறை செயலாளர்
பிரித்தானிய வெளிவிவகாரத் துறை செயலாளர் யெவெட் கூப்பர், ஜூன் 2-ஆம் திகதி சீனாவிற்கு பயணம் செய்து அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் வாங் யி மற்றும் துணை ஜனாதிபதி ஹான் ஜெங் ஆகியோரை சந்திக்க உள்ளார்.
அடுத்த நாள் ஷென்சென் நகரில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
பின்னர் ஜூன் 4-ஆம் திகதி இந்தியாவிற்கு சென்று, வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தொழில்முனைவோர், கல்வியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் சந்திப்பை மேற்கொள்கிறார்.

இந்த பயணம், உலகளாவிய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நோக்கத்துடன் நடைபெறுகிறது. ஹார்முஸ் நீரிணை பிரச்சினை, ரஷ்யா-உக்ரைன் போர், சமீபத்திய எபோலா தொற்று பரவல் போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஜனவரியில் சீனாவிற்கு சென்றபோது, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் சந்தித்து, வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்பத்தில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்திருந்தார்.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவிற்கு சென்ற முதல் பிரித்தானிய பிரதமராக ஸ்டார்மர் வரலாற்று சாதனை படைத்தார்.
இந்தியா-பிரித்தானியா இடையே கடந்த ஆண்டு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், பிரித்தானியா விதித்த புதிய எஃகு இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக அதன் நடைமுறைப்படுத்தலில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், “UK-India Vision 2035” திட்டத்தின் கீழ் இரு நாடுகளும் பல துறைகளில் இணைந்து செயல்படுகின்றன.
பிரித்தானியா தற்போது மந்தமான பொருளாதார வளர்ச்சி, எண்ணெய் விலை உயர்வு, மற்றும் ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் மோதலால் ஏற்பட்ட உலகளாவிய பதற்றங்களை சமாளிக்க முயற்சிக்கிறது.
இந்த சூழலில், சீனா மற்றும் இந்தியா போன்ற பெரிய சக்திகளுடன் உறவுகளை வலுப்படுத்துவது பிரித்தானியாவிற்கு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |