வியட்நாமை தொடர்ந்து இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்கும் மற்றொரு நாடு
இந்தியா உருவாக்கிய பிரம்மோஸ் (BrahMos) சூப்பர் சோனிக் க்ரூஸ் ஏவுகணை, உலகின் வேகமான மற்றும் துல்லியமான ஆயுதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
2022-ல் பிலிப்பைன்ஸ் முதன்முதலில் இந்த ஏவுகணையை வாங்கியது. தற்போது வியட்நாம் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது, மேலும் இந்தோனேசியாவுடனான ஒப்பந்தமும் இறுதி கட்டத்தில் உள்ளது.
இதனை, இந்திய பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங் சிங்கப்பூரில் நடைபெற்ற Shangri-La Dialogue பாதுகாப்பு மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

வியட்நாமுடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் சுமார் ரூ.5,800 கோடி மதிப்புடையது. இதில் கடலோர பாதுகாப்பு ஏவுகணை பேட்டரிகள், ஆரம்ப கட்ட ஏவுகணைகள், பயிற்சி மற்றும் லாஜிஸ்டிக் ஆதரவு அடங்கும்.
எதிர்காலத்தில் வியட்நாம், விமானங்களில் பொருத்தக்கூடிய BrahMos ஏவுகணைகளையும் வாங்க வாய்ப்பு உள்ளது. இந்தோனேஷியாவுடனான ஒப்பந்தமும் விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் சீனக் கடலில் சீனாவுடன் நிலவும் கடல் எல்லை பிரச்சினைகளின் சூழலில், வியட்நாம், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இந்தியாவின் BrahMos ஏவுகணையை வாங்குவது முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
BrahMos ஏவுகணை Mach 3 வேகத்தில் (ஒலி வேகத்தை விட மூன்று மடங்கு) பறக்கக்கூடியது. நிலம், கடல், வானம் என மூன்று தளங்களிலிருந்தும் ஏவப்படக்கூடியது. இதன் அதிவேகத் திறன் மற்றும் துல்லியத்தின் காரணமாக, எதிரி கப்பல்கள் மற்றும் முக்கிய இராணுவ தளங்களை விரைவாக தாக்கும் வல்லமை கொண்டது.
இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவிற்கு மூலோபாய ரீதியாக மிக முக்கியமானவை. 2020-இல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, சீனாவுடனான உறவுகள் பதட்டமாக உள்ள நிலையில், இந்தியா தனது தாக்கத்தை தென்கிழக்கு ஆசியாவில் அதிகரிக்க முயல்கிறது. மலேசியா மற்றும் தாய்லாந்தும் BrahMos ஏவுகணையை வாங்க ஆர்வம் காட்டியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |