இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! பிரித்தனியா, ஜேர்மனி, பிரான்ஸ் இணைந்து எச்சரிக்கை!
2015 அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி யுரேனியம் உலோகம் தயாரிப்பதை நிறுத்துமாறு பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் வெள்ளிக்கிழமை ஈரானை எச்சரித்துள்ளன.
அமேரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் 2015-ஆம் ஆண்டு JCPOA எனும் அணுசக்தி கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டது.
ஆனால், 2020 டிசம்பரில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்க 20 சதவீத செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்ய ஈரான் அரசு முடிவெடுத்தது.
இதனைத் தொடர்ந்து, சர்வதேச அணுசக்தி அமைப்பு (IAEA) சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி யுரேனியம் உலோகத்தை உற்பத்தி செய்கிறது என்பதை உறுதிப்படுத்தியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஈரான் யுரேனியம் உற்பத்தியை நிறுத்தாவிட்டால், அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை நீக்கமுடியாது என எச்சரித்தார்.
இந்நிலையில், JCPOA ஒப்பந்தத்தின் உறுப்பினர்களான பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி கூட்டாக ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளன.
அந்த அறிக்கையில், "ஈரானை இந்த நடவடிக்கைகளை தாமதமின்றி நிறுத்தவும், அதன் அணுசக்தி திட்டத்தில் எந்தவொரு புதிய இணக்கமற்ற நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்ந்தால் கடும் விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும் என மூன்று நாடுகளும் எச்சரித்துள்ளன.