ஈரான் மீது தாக்குதல் நடத்த பிரிட்டிஷ் இராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதி: பிரித்தானியா அதிரடி
ஈரான் மீது தாக்குதல் நடத்த தங்களது ஏவுகணை தளங்களை பயன்படுத்தி கொள்ள பிரித்தானியா அமெரிக்காவிற்கு அனுமதி வழங்கியுள்ளது.
பிரித்தானியா அனுமதி
ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் தாக்குதல் 3 வாரங்களை கடந்து நடைபெற்று வருகிறது.
எரிசக்தி விநியோகத்திற்கு முக்கிய வழித்தடமாக கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை விடுவிக்க உலக நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்து இருந்தார்.
இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஈரான் ஏவுகணை தளங்கள் மீது தாக்குதல் நடத்த பிரித்தானியா தங்களுக்கு சொந்தமான ராணுவ தளங்களை பயன்படுத்தி கொள்ள அமெரிக்காவுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

வெள்ளிக்கிழமை பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வரையறுக்கப்பட்ட தற்காப்பு பயன்பாடுகளுக்கு மட்டுமே பிரித்தானிய தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், ராணுவ கொள்கையில் தற்போது முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்திய போதும் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பிரித்தானியா அனுமதி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவின் இந்த திடீர் கொள்கை மாற்றமானது, சர்வதேச சரக்கு கப்பல்கள் போக்குவரத்து மற்றும் எரிசக்தி விநியோகத்தை தடுக்கும் ஈரானிய படைகளின் கட்டமைப்பை அழிக்கவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |