காஸா ஆளுநராக நியமிக்கப்படும் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர்
அமெரிக்கா தலைமையிலான அமைதித் திட்டங்களின் கீழ் காஸாவிற்கான இடைக்கால நிர்வாகத்தில் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் முன்னணிப் பங்கை வகிக்கக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இடைக்கால நிர்வாகம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் தொடர்புடைய அதிகார மையத்துடன் டோனி பிளேர் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகள், காஸா போருக்கு பின்னர் உருவாக்கப்படும் இடைக்கால நிர்வாகத்திற்கு அவர் தலைமை தாங்கலாம் என்றே கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் ஐ.நா. மற்றும் வளைகுடா நாடுகளின் ஆதரவுடன் பிளேர் இடைக்கால நிர்வாகத்தை வழிநடத்துவார் என தெரிய வந்துள்ளது.
கடந்த 2007 முதல் 2015 வரையில் மத்திய கிழக்கு நாடுகளின் அமைதி மத்தியஸ்தராக பணியாற்றியுள்ள டோனி பிளேரை இந்த இடைக்கால நிர்வாகத்திற்கு தலைமை தாங்க கேட்டுக்கொண்டதாகவே கூறப்படுகிறது.
ஆனால், டோனி பிளேர் தரப்பில் இருந்து இதுவரை இந்த விவகாரம் தொடர்பில் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், அமெரிக்கா தலைமையிலான அமைதித் திட்டத்தில் டோனி பிளேரின் ஈடுபாடு குறித்து இஸ்ரேலிய ஊடகங்கள் கடந்த வாரம் செய்தி வெளியிட்டன.
மேலும், பிளேரின் நெருக்கமான வட்டாரத்தில் இருந்து இஸ்ரேல் தரப்பு அதை உறுதி செய்திருந்தது. மேலும், காஸா போரை நிறுத்துவதற்கான ஒரு திட்டத்தில் அவர் மற்ற தரப்பினருடன் இணைந்து பணியாற்றி வருகிறார் என்பதை இஸ்ரேல் ஊடகங்கள் முதலில் வெளியிட்டது.
ஐந்து ஆண்டுகளுக்கு
இருப்பினும், காஸா மக்களை நிரந்தரமாக இடம்பெயரச் செய்யும் எந்தவொரு திட்டத்தையும் பிளேர் ஆதரிக்க மாட்டார் என்றும், காஸா பிரதேசத்திற்கான எந்தவொரு இடைக்கால நிர்வாக அமைப்பும் இறுதியில் அதிகாரத்தை பாலஸ்தீன அதிகாரசபையிடம் ஒப்படைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டோனி பிளேர் தலைமையிலான இடைக்கால நிர்வாகமானது பாலஸ்தீனியர்களிடம் கட்டுப்பாட்டை ஒப்படைப்பதற்கு முன்பு, ஐந்து ஆண்டுகளுக்கு உச்ச அரசியல் மற்றும் சட்ட அதிகாரமாக இருக்க ஐ.நா.வின் ஒப்புதலை நாடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அதிகாரசபை 25 பேர் வரை கொண்ட செயலகத்தையும் ஏழு பேர் கொண்ட குழுவையும் கொண்டிருக்கும். தொடக்கத்தில் காஸாவின் தெற்கு எல்லைக்கு அருகிலுள்ள எகிப்தில் இந்த நிர்வாகம் அமைந்திருக்கும், பின்னர் பாதுகாப்பை உறுதி செய்ததும் காஸாவிற்கு மாற்றப்படும்.
ஆனால், 2003 ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பில் பிளேயரின் ஈடுபாடு, தற்போது காஸா விவகாரத்தில் அவரது செயற்பாடுகளை சந்தேகத்துடன் பார்க்கும் நிலை உருவாகலாம் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |