ஈரானை முற்றுகையிடும் அமெரிக்கா திட்டம்: பங்கேற்க மறுக்கும் பிரித்தானியா
அமெரிக்காவின் துறைமுக முற்றுகை நடவடிக்கையில் பிரித்தானியா பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானை முற்றுகையிடும் அமெரிக்கா திட்டம்
பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், ஈரானிய துறைமுகங்களை திங்கட்கிழமை முதல் முடக்க போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும் ஈரானுக்கு கட்டணம் செலுத்தி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணம் செய்யும் அனைத்து கப்பல்களையும் இடைமறிக்க அமெரிக்க படைகளுக்கும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

பிரித்தானியா பங்கேற்க மறுப்பு
இந்நிலையில் ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடும் அமெரிக்காவின் ராணுவ திட்டங்களில் பிரித்தானியா பங்கேற்காது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கையில் பிரித்தானியா தனது கடற்படை கப்பல்களையோ அல்லது வீரர்களையோ ஈடுபடுத்தாது.
அதே நேரத்தில் குறிப்பிட்ட பிராந்தியத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பிரித்தானிய படைகளை திரும்பப் பெறப்போவதில்லை என்றும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.

மேலும் கண்ணிவெடிகளை அகற்றுதல், வான்வழித் தாக்குதல்களை முறியடிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் ஆகிய கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் மட்டும் பிரித்தானிய பங்கேற்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச வர்த்தக வழித்தடங்களை பாதுகாப்பது பிரித்தானியாவின் முக்கிய நோக்கம் என்று அந்நாட்டின் அரசு செய்தி தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |