தீ விபத்தில் கொல்லப்பட்ட குழந்தை: பிரித்தானியாவில் வீடு ஒன்றில் பயங்கர விபத்து
பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
குழந்தை உயிரிழப்பு
பிரித்தானியாவின் சுவான்சீ(Swansea) நகரின் வெஸ்ட் கிராஸ் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சனிக்கிழமை மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை ஒன்று கொல்லப்பட்டுள்ளது என தெற்கு வேல்ஸ் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக துப்பறியும் காவலர் கார்ல் பிரைஸ் வழங்கிய தகவலில், வெஸ்ட் கிராஸ் பகுதியில் நடைபெற்ற இந்த துயரமான சம்பவத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது, எனவே சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எங்களது எண்ணம் உள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் வீட்டில் இருந்த மூன்று பேரில், குழந்தை ஒன்றும் மற்றும் பெண்மணி ஒருவரும் புகையை சுவாசித்ததால் சிரமத்தில் உள்ளனர்.
மேலும் ஆண் ஒருவர் மிகவும் மோசமான நிலையில் மோரிஸ்டன் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு நன்றி
எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்க உதவிய அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கார்ல் பிரைஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் விபத்து குறித்த விசாரணையின் போது சாலை அடைப்பை பொறுமையுடன் ஏற்றுக் கொண்ட உள்ளூர் மக்களுக்கு நன்றி என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |