உக்ரைன் இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்: அவர் சொன்ன பின்னணி
ரஷ்ய இராணுவத்திற்காக உக்ரைனில் களமிறக்கப்பட்ட 22 வயது இந்தியர் ஒருவரை சிறை பிடித்துள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது.
உண்மைத்தன்மை
குறித்த தகவலை இதுவரை இந்திய தரப்பு உறுதி செய்யவில்லை என்பதுடன், அந்த நபரை அடையாளம் காணும் பொருட்டு உக்ரேனிய ஊடக அறிக்கைகளைச் சரிபார்த்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் அந்த நபர் இந்தியாவின் குஜராத் மாகாணத்தின் மோர்பி பகுதியை சேர்ந்த மஜோதி சாஹில் முகமது ஹுசைன் என உக்ரைன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பில் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவிக்கையில்,
வெளியான தகவலின் உண்மைத்தன்மையை உறுதிசெய்து வருகிறோம். இது தொடர்பாக உக்ரைன் தரப்பிலிருந்து இதுவரை எந்த முறையான தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
உக்ரைன் ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், ரஷ்ய பல்கலைக்கழகம் ஒன்றில் கல்விக்காக சென்றிருந்த ஹுசைன் உக்ரைனுக்கு எதிராகப் போரிட ரஷ்ய இராணுவத்தால் சேர்க்கப்பட்டார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
உக்ரைன் இராணுவம் பதிவு செய்துள்ள காணொளியில், ரஷ்யாவில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தால் பயிற்சி
மேலும், சிறையில் இருந்த காலத்தில், அதிக தண்டனையைத் தவிர்ப்பதற்காக ரஷ்ய இராணுவத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
தாம் சிறையில் இருக்க விரும்பவில்லை என்பதாலையே, ரஷ்ய இராணுவத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டதாக ஹுசௌன் தெரிவித்துள்ளார். 16 நாட்கள் ரஷ்ய இராணுவத்தால் பயிற்சி அளிக்கப்பட்டு, அக்டோபர் 1ம் திகதி உக்ரைனில் போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், மூன்று நாட்களுக்கு பிறகு தமது தளபதியுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக உக்ரைன் இராணுவத்திடம் சரணடைந்ததாக ஹுசைன் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய இராணுவத்தில் சேர்ந்ததற்காக தனக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதாகவும், ஆனால் அது அவருக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை என்றும் ஹுசைன் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |