உக்ரைன் நெருக்கடி: ரஷ்யாவின் எரிவாயு குழாய் திட்டத்திற்கு ஜேர்மனி தடை!
உக்ரைனுக்குள் துருப்புக்களை அனுப்ப விளாடிமிர் புடின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ரஷ்யாவின் முக்கிய எரிவாயு குழாய்த்திட்டத்தை ஜேர்மனி நிறுத்தியுள்ளது.
திங்கட்கிழமையன்று, உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள ரஷ்ய ஆதரவு மாகாணகளான டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய இரண்டு மாகாணங்களை, தன்னாட்சி பகுதியாக அங்கீகரிப்பதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார்.
அதையடுத்து, அந்த இரண்டு பகுதிகளிலும் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால், உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் போர் மூளும் அபாயம் மேலும் அதிகரித்தது.
இந்த நடவடிக்கையை ஒரு பரந்த படையெடுப்புக்கான சாக்குப்போக்காகவே மேற்கத்திய நாடுகள் பார்க்கின்றன. இதற்கு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, மேற்கு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. அந்த வகையில், ரஷ்யாவிலிருந்து வரும் நோர்ட் ஸ்ட்ரீம் 2 பைப்லைன் (Nord Stream 2) எனும் மிகப்பெரிய எரிவாயு குழாய் திட்டத்தை ஜேர்மனி நிறுத்தி வைத்துள்ளது.
முன்னதாக, உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசியதாவது, உக்ரைனில் இரண்டு ரஷ்ய ஆதரவு பிராந்தியங்களில் வர்த்தகம் மற்றும் நிதியுதவி மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி ரஷ்ய அரசாங்கத்துக்கு மேற்கத்திய நாடுகள் நிதி வழங்காது.
உக்ரைன் விவகாரத்தில் தூதரக ரீதியான பேச்சுவார்த்தைக்கு கால அவகாசம் உள்ளது. இதை மீறி ரஷ்யா தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்தால், அமெரிக்கா "இந்த தடைகளை அதிகரிக்கும்" என்றார்.