AI ட்ரோன்களால் உக்ரைன் கொடூரத் தாக்குதல்... நாளுக்கு 1,000 வீரர்களை இழக்கும் ரஷ்யா
AI ட்ரோன்களுடன் உக்ரேனிய இராணுவம் கொடூரத் தாக்குதலை முன்னெடுத்து வருவதால், ரஷ்யா ஒரு நாளைக்கு 1,000-க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்து வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய தலைமுறை ட்ரோன்கள்
விளாடிமிர் புடினின் படைகளின் முன்னேற்றத்தைத் தடுக்கும் நோக்கில், உக்ரைன் போர்க்களம் முழுவதும் ட்ரோன்கள் வாயிலாகத் தொடர்ச்சியான, வரையறுக்கப்பட்ட மற்றும் உத்திசார் எதிர் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.

இதனால் இறப்பு எண்ணிக்கை பலமடங்காக அதிகரித்துள்ளது. மேலும், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் இயங்கும் புதிய தலைமுறை ட்ரோன்கள், ரஷ்யப் படைகளுக்குப் பின்னால் அமைந்துள்ள, இதுவரை எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாத பகுதிகளிலும் பெரும் சேதத்தை விளைவித்து வருகிறது.
டொனெட்ஸ்க் நகரிலும், மரியுபோலுக்குக் கிழக்கே ரஷ்ய எல்லையுடன் கிரிமியாவை இணைக்கும், பெரும்பாலும் சேதமடையாத எம்-14 தெற்குக் கடற்கரை நெடுஞ்சாலை நெடுகிலும் சரக்கு ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டுள்ளன.
மேலும், கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் உயிரிழப்பு விகிதங்கள், விளாடிமிர் புடினின் இராணுவ நடவடிக்கையைத் தடுமாற வைப்பதால், அதிகரித்து வரும் அச்சுறுத்தலை ரஷ்ய இராணுவ வட்டாரங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.
சமீப நாட்களில் ஆயிரக்கணக்கான வீரர்கள் உக்ரைன் இராணுவத்தின் பதிலடியால் கொல்லப்படுவது ரஷ்யாவில் புடினுக்கு எதிராக கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
உக்ரைன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின், ஏப்ரல் மாதத்தில் மட்டும் 32,980 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதாவது சராசரியாக நாளுக்கு 1,099 வீரர்கள் என்றே கூறுகின்றனர்.
இதுவரை ஐந்து லட்சத்திற்கும்
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மே மாதத்தில் மட்டும் இதுவரை ரஷ்யா மொத்தம் 28,200 வீரர்களை இழந்துள்ளது, சராசரியாக தினசரி 1,044 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், புடினின் நான்காண்டுப் போரினால் இதுவரை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்யர்கள் மரணமடைந்துள்ளதாக பிரித்தானிய வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

இதனிடையே, டோப்ரோபில்லியா, ஸ்லோவியான்ஸ்க், க்ரமடோர்ஸ்க் மற்றும் கோஸ்டியாண்டினிவ்கா உள்ளிட்ட பலப்படுத்தப்பட்ட உக்ரேனிய நகர்ப்புறப் பகுதிகளைத் தாக்குவதில் விளாடிமிர் புடின் படைகள் தற்போது கவனம் செலுத்தி வருவதாக போர்க்கள அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும், அவரது படைகள், 20 கிலோமீற்றர் உள்ளே ஒரு buffer zone உருவாக்கவும், தற்காப்பு அரண்களை விரிவுபடுத்தவும் முயன்று, வடக்கு உக்ரைன் எல்லைப் பகுதிகளான சுமி மற்றும் கார்கிவ் மாகாணங்களில் தற்போது தீவிரமாக முன்னேறி வருகின்றன.
ஆனால், உலகிலேயே மேம்பட்ட வகையைச் சேர்ந்த, AI தொழில்நுட்பத்தால் இயங்கும் புதிய வகை ட்ரோன்களைப் பயன்படுத்தி, முக்கியப் பகுதிகளில் எதிரிகளின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதில் உக்ரைனியப் படைகள் வெற்றி கண்டு வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |