அத்துமீறி நுழைந்த உக்ரைன் ட்ரோன்கள்... ஐரோப்பிய நாடொன்றின் பிரதமர் ராஜினாமா
லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ட்ரோன்கள் தொடர்பான சர்ச்சையின் காரணமாக, கூட்டணியில் உள்ள ஒரு முக்கிய கட்சி ஆதரவை விலக்கிக் கொண்டதை அடுத்து, லாட்வியாவின் பிரதமர் எவிகா சிலினா பதவி விலகியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர்
அந்த ட்ரோன்கள் ரஷ்யாவின் எல்லையை ஒட்டி தாக்குதல் நடத்தும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், ரஷ்ய இராணுவத்தின் மின்னணு கண்காணிப்பிற்குப் பிறகு அவை மே 7 அன்று லாட்வியாவின் எல்லைக்குள் விழுந்து நொறுங்கியதாகவும் உக்ரைன் விளக்கமளித்துள்ளது.
ட்ரோன் விழுந்து நொறுங்கியதில், கிழக்கு லாட்வியாவில் உள்ள பயன்படுத்தப்படாத எண்ணெய் சேமிப்புத் தளம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில், உக்ரைன் ட்ரோன் விவகாரம் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை தனது பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரிஸ் ஸ்ப்ருட்ஸை பிரதமர் சிலினா பதவி நீக்கம் செய்தார்.
அத்துடன், ட்ரோன் ஊடுருவல்களை எதிர்கொள்வதற்கு லாட்வியாவின் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் போதுமான வேகத்தில் செயல்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
ஸ்ப்ருட்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இடதுசாரி முற்போக்குக் கட்சியைச் சேர்ந்த அவரது ஒன்பது கூட்டாளிகள், சிலினா அவரைப் பலிகடா ஆக்கிவிட்டதாகக் குற்றம் சாட்டி, அவரது ஆளும் கூட்டணியிலிருந்து விலகினர்.
இதனிடையே, ஸ்ப்ருட்ஸ் திங்களன்று முறைப்படி ராஜினாமா செய்தார், அவருக்குப் பதிலாக ஒரு இராணுவ அதிகாரியை சலினா பரிந்துரைத்தார், ஆனால் இடதுசாரி முற்போக்குக் கட்சி அவரை நிராகரித்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பு
இடதுசாரி முற்போக்குக் கட்சி கூட்டணியில் இருந்து விலகியதால், 100 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அவரது அரசாங்கத்திற்கு வெறும் 41 இடங்கள் மட்டுமே எஞ்சின.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஐந்து மாதங்களே உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்போவதாகக் கூறியுள்ளன.
இந்த நெருக்கடிகளுக்கு நடுவே, கிரீன் மற்றும் விவசாயிகள் ஒன்றியத்தைச்' சேர்ந்த வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்மாண்ட்ஸ் கிராஸ், ஊழல் தடுப்பு அமைப்பின் தொடர் விசாரணைகளின் ஒரு பகுதியாகச் சிறிது நேரம் காவலில் வைக்கப்பட்டார்.
யூனிட்டி கட்சியைச் சேர்ந்த சிலினா, செப்டம்பர் 2023 முதல் பிரதமராக இருந்து வந்தார். இந்த நிலையில், புதிய அரசாங்கம் அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக, வெள்ளிக்கிழமையன்று கட்சித் தலைவர்களைச் சந்திக்கப்போவதாக ஜனாதிபதி எட்கார்ஸ் ரிங்கேவிச்ஸ் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |