உக்ரைனில் அதிகரித்துள்ள போர் விமானங்கள் எண்ணிக்கை: பென்டகன் அறிவிப்பு!
போர்விமானங்கள் மற்றும் போர் விமானங்களை பழுது பார்க்கும் அமைப்புகளை உக்ரைன் பெற்று இருப்பதாக அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமை அலுவலகம் பென்டகன் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் இரண்டாம் கட்டத்தை அடைந்து போர் மேலும் தீவிரமடைந்து இருக்கும் நிலையில், உக்ரைனுக்கு பலம் சேர்க்கும் விதமாக போர் விமானங்கள் மற்றும் போர் விமானங்களை பழுது பார்க்கும் தொழில்நுட்ப அமைப்புகள் சென்றடைந்து இருப்பதாக அமெரிக்காவின் பென்டகன் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி, உக்ரைனுக்கு போர் விமானங்கள் சென்றடைந்து இருப்பதை உறுதி செய்துள்ளார். இருப்பினும் எந்தெந்த நாடுகள் போர் விமானங்களை வழங்கியுள்ளது என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார்.
ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்பு உக்ரைனில் இருந்த போர் விமானங்களின் எண்ணிக்கையை விட தற்போது அதன் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா முழுமையான எந்தவொரு போர் விமானங்களையும் வழங்கவில்லை ஆனால் போர் விமானங்களுக்கு தேவையான உதிர் பாகங்களை வழங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
50 நாள்களை கடந்து இருக்கும் உக்ரைன் போரில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் வழங்கிய வான் தாக்குதல் ஏவுகணைகள் இன்னமும் துடிப்புடன் பயன்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு ஒருகாலத்தில் ஆப்கானிஸ்தானில் பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்களை உக்ரைனிக்கு வழங்க இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
கடைசி வீரர் வரை உக்ரைன் போராட வேண்டும்... அமெரிக்கா மீது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் குற்றசாட்டு!