30 மில்லியன் டன்... உக்ரைன் தானிய ஏற்றுமதி மீண்டும் கடும் சிக்கலில்
ரஷ்யாவால் ஸ்தம்பித்துப் போயிருந்த உக்ரைன் தானிய ஏற்றுமதி மீண்டும் ஒரு பாரிய சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது.
ரஷ்ய போரினால் மொத்தமாக முடங்கிப்போயிருந்த உக்ரைன் தானிய ஏற்றுமதியானது, போலந்து மற்றும் ருமேனியா ஊடாக முன்னெடுக்க திட்டமிட்டிருந்த நிலையில், அதனால் ஏற்படும் கால விரயம் மற்றும் பொருட்செலவு அடுத்த சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் முக்கிய துறைமுகங்கள் ஊடாக தானியங்களை ஏற்றுமதி செய்ய ரஷ்யா தடையாக இருந்தது. அதனால் ஏற்பட்ட உலகளாவிய உணவு நெருக்கடியைத் தவிர்க்க போலந்து மற்றும் ருமேனியா ஊடாக உக்ரைன் தானியங்களை ஏற்றுமதிக்கு திட்டமிட்டனர்.
சாலை மார்கம் மட்டுமின்றி, ஆறுகளில் படகு மூலமும், ரயில் சேவையை பயன்படுத்தியும் உக்ரைனில் தேங்கியுள்ள 30 டன் தானியங்களை ஏற்றுமதி செய்ய முடிவு செய்தனர்.
ஆனால் போலந்து மற்றும் ருமேனியா ஊடாக தானியங்களை ஏற்றுமதி செய்வது சிக்கல் மிகுந்தது என உக்ரைன் துணை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தங்களால் இயன்ற அளவுக்கு முயற்சி முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் இருந்து போலந்து வரையில் ரயில் சேவைகள் செயல்பட்டு வருகிறது.
எனவே தானியங்கள் அதிக பரிமாற்றம் அல்லது சேமிப்பு வசதிகள் இல்லாத எல்லையில் உள்ள வெவ்வேறு ரயில்களுக்கு மாற்றப்பட வேண்டும். அங்கிருந்து ருமேனியாவுக்கு ரயில்களை திருப்பி விடவேண்டும்.
டான்யூப் நதியில் அமைந்துள்ள துறைமுகம் ஊடாக படகில் தானியங்களை கான்ஸ்டன்டா துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பல்களுக்கு அனுப்ப வேண்டும்.
இந்த திட்டமானது சிக்கல் மிகுந்தது மட்டுமின்றி, அதிகமான பொருட்செலவும் கொண்டது என உக்ரைன் துணை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறு இருக்க, தானிய ஏற்றுமதியையோ, சிறார்களையோ ஒருபோதும் குறி வைப்பதில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. மட்டுமின்றி, உலகளாவிய உணவு நெருக்கடிக்கு தங்கள் மீது அபாண்டமாக போடப்பட்டுள்ள தடைகளே காரணம் எனவும், உக்ரைனால் கடலில் நிறுவப்பட்டுள்ள கண்ணிவெடிகள் காரணமாக உணவு ஏற்றுமதி சரிவடைந்துள்ளதுடன் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
உலகின் நான்காவது பெரிய தானிய ஏற்றுமதியாளராக உக்ரைன் உள்ளது, மேலும் உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் சுமார் 30 மில்லியன் டன் தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, அவை சாலை, நதி மற்றும் ரயில் வழியாக ஏற்றுமதி செய்ய முயற்சிக்கிறது.
தானிய ஏற்றுமதிக்கு துருக்கி மேற்கொண்ட முயற்சிகள் இலக்கை எட்டாத நிலையில், தற்போது உக்ரைன் பால்டிக் நாடுகளுடன் உணவு ஏற்றுமதிக்கான மூன்றாவது வழித்தடத்தை உருவாக்க பேச்சுவார்த்தை முன்னெடுத்து வருகிறது.