உக்ரைன் தானிய ஏற்றுமதி... மொத்த பொறுப்பும் ஐ.நாவுக்கே: ஜெலென்ஸ்கி திட்டவட்டம்
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே முன்னெடுக்கப்பட்ட முக்கிய ஒப்பந்தத்திற்கு உத்தரவாதம் அளிக்க ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா ஆத்திரமூட்டல்களில் ஈடுபடலாம், உக்ரேனிய மற்றும் சர்வதேச முயற்சிகளை இழிவுபடுத்தும் முயற்சிகளை முன்னெடுக்கலாம். ஆனால் நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையை நம்புகிறோம் என வெள்ளிக்கிழமை ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தானிய ஏற்றுமதிக்காக போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்திற்கான முழு பொறுப்பையும் ஐ.நா ஏற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கருங்கடல் ஊடாக தானிய ஏற்றுமதி தொடர்பான ஒப்பந்தத்தில் ரஷ்யாவும் உக்ரைனும் வெள்ளிக்கிழமை இஸ்தான்புல்லில் கையெழுத்திட்டன, துருக்கி மற்றும் ஐ.நா. இதில் தங்கள் ஆதரவையும் ஒப்புதலையும் அளித்திருந்தது.
உக்ரைனும் ரஷ்யாவும் விவசாயப் பொருட்களின் முக்கிய ஏற்றுமதியாளர்களாக திகழ்கின்றனர், ஆனால் போரால் உக்ரேனிய கோதுமை ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது, சண்டையில் அறுவடைகள் சேதமடைந்தன மற்றும் துறைமுகங்கள் முற்றுகையிடப்பட்டு முடக்கப்பட்டன.
இந்த நிலையிலேயே துருக்கி மற்றும் ஐ.நா மன்றத்தில் தலைமையில் இரு நாடுகளும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. உக்ரைனில் தற்போது தேங்கியுள்ள தானியங்களின் மொத்த மதிப்பு சுமார் 10 பில்லியன் டொலர்கள் என கூறப்படுகிறது.