உக்ரைன் படையெடுப்புக்கு மத்தியில்... ரஷ்யாவில் அசுர பலத்துடன் களமிறங்கும் சீனா
சர்வதேச ராணுவ விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக சீனா அடுத்த மாதம் ரஷ்யாவுக்கு ராணுவ வீரர்களையும் டாங்கிகளையும் அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து சர்வதேச நாடுகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ள நிலையில் சீனா இந்த முடிவுக்கு வந்துள்ளது.
சமீபத்தில் சீனாவின் உள் மங்கோலியாவில் உள்ள மன்சூலியை விட்டு வெளியேறிய சீன இராணுவம் சார்பில் குழு ஒன்று ரஷ்யாவிற்கு செல்ல உள்ளது. இதில் இராணுவர் வீரர்கள், வாகனங்கள் மற்றும் டாங்கிகளும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த அணியானது ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள Zabaikalsk நோக்கி செல்கிறது. ஆகஸ்ட் 13 முதல் 27 வரை முன்னெடுக்கப்படும் ரஷ்யாவின் மிகப்பெரிய பன்னாட்டு இராணுவப் பயிற்சியில் 37 நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு எதிராக சீன அணியும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா மட்டுமின்றி ஈரான், இந்தியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா உள்ளிட்ட நாடுகளும் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இராணுவம் தொடர்பான 28 போட்டிகள் முன்னெடுக்கப்பட உள்ளது. மெடிக்கல் ரிலே ரேஸ் முதல் ராணுவ சமையல்காரர்களை உள்ளடக்கிய ஃபீல்ட் கிச்சன் போட்டி வரை இதில் உட்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான ஒத்தகருத்துகொண்ட சீனாவும் ரஷ்யாவும் கூட்டு ராணுவப் பயிற்சிகளில் தவறாமல் பங்கேற்று வருகின்றனர். இதனிடையே, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது போன்று தைவான் மீது சீனாவும் படையெடுக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.