ஒப்புக்கொண்ட ரஷ்யா... நாளுக்கு 380 வீரர்கள் பலி: பொய் என்ற உக்ரைன்
உக்ரைன் படையெடுப்பில் இதுவரை 10,000 வீரர்கள் மட்டுமே பலியாகியுள்ளதாக ரஷ்யா வெளியிட்ட தகவல் உண்மைக்கு புறம்பானது என உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை தொடங்கி 25 நாட்கள் கடந்துள்ளது. இரண்டே நாளில் உக்ரைன் தலைநகரை கைப்பற்றுவதாக கூறி களமிறங்கிய ரஷ்யா, இதுவரை ஆயிரக்கணக்கான வீரர்களையும் இராணுவ தளவாடங்களையும் இழந்துள்ளது.
மட்டுமின்றி 15,000 ரஷ்ய வீரர்களை கொன்றுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ள நிலையில், தற்போது முதன் முறையாக ரஷ்யா இழப்புகள் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில், இதுவரை 9,861 வீரர்கள் உக்ரைனில் கொல்லப்பட்டதாகவும் 16,153 வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ரஷ்ய தரப்பு வெளியிட்டுள்ள கணக்குகளின் அடிப்படையில் நாளுக்கு 379 வீரர்கள் உக்ரைனில் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளுக்கு 1,000 வீரர்கள் போரில் இருந்து விடுவிக்கப்பட்டு வருவதாகவும், பதிலுக்கு புதிதாக வீரர்களை களமிறக்குவதாகவும் ரஷ்ய தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் உக்ரைன் தரப்பில் கூறப்படும் எண்ணிக்கை உண்மைக்கு புறம்பானது என குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே, அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் ரஷ்ய வீரர்கள் கடும் நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், இதுவரை 21,000 வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கண்டிப்பாக 7,000 எண்ணிக்கைக்கு மேல் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, உயரடுக்கு பராட்ரூப்பர் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட ஐந்து ஜெனரல்கள் மற்றும் பிற மூத்த தளபதிகளும் ரஷ்ய தரப்பில் பலியாகியுள்ளனர்.