உக்ரைனுக்காக போரிடும் வீரர்கள் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டவர்கள்: ரஷ்யா பகீர் குற்றச்சாட்டு
ரஷ்யாவுக்கு எதிராக களமிறக்கப்பட்டுள்ள வீரர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்க ஆய்வகங்களில் தயாரிக்கப்பட்ட கொலைகார இயந்திரங்கள் என ரஷ்யா பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் சுமார் ஐந்து மாதங்களாக நீடித்து வருகிறது. ஆனால், உக்ரைன் உடனான போரில் தங்கள் பக்கம் இழப்பை எதிர்கொள்வதற்கு முதன்மை காரணம் எதுவென ரஷ்யா தற்போது அம்பலப்படுத்தியுள்ளது.
ரஷ்ய துருப்புகளே போரில் இருந்து தப்பிக்க தங்களுக்கு காயங்கள் ஏற்படுத்தியதும், கருவிகளை சேதப்படுத்தியதும், போரிட மறுப்பு தெரிவித்ததுமான தகவல்கள் முன்னர் வெளியானது.
ஆனால், உக்ரைன் மீதான போரில் ரஷ்யா பின்னடைவை எதிர்கொள்ள காரணம், போதை மருந்து செலுத்தப்பட்ட உக்ரைன் வீரர்களே என தற்போது ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது.
குறித்த வீரர்களை உக்ரைன் நிர்வாகம் அமெரிக்காவின் உதவியுடன் ஆய்வகங்களில் உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், தங்களிடம் சரணடைந்துள்ள உக்ரைன் வீரர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய வீரர்கள் மிகவும் கொடூரமாகவும் இரக்கமின்றியும் போரிட்டதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது. அப்பாவி மக்கள் மீதும் கைதான ரஷ்ய வீரர்கள் மீதும் கொடூரமாக அவர்கள் நடந்துகொண்ட விதம் இதை உறுதி செய்துள்ளது என ரஷ்ய தரப்பு குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க நிர்வாகத்தின் கீழ் இதுபோன்ற கொலைகாரர்களை உக்ரைன் உருவாக்கியுள்ளதாகவும் ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. மட்டுமின்றி, உக்ரைனுக்கான முன்னாள் சுகாதார அமைச்சர் உக்ரேனிய-அமெரிக்க இரட்டை குடிமகனாக இருந்ததால், அவர் உக்ரைனுக்காக ஹெபடைடிஸ் சிகிச்சைக்கான மருந்துகளை வாங்க நடவடிக்கை முன்னெடுத்தார் என ரஷ்யா கூறியுள்ளது.
ஆனால் உக்ரைன் மீதான போரை நியாயப்படுத்த ரஷ்யா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், ஒவ்வொருமுறையும் புதிய கதைகளை விளாடிமிர் புடின் நிர்வாகம் வெளியிடுவதாகவும் உக்ரைன் தரப்பு கூறியுள்ளது.