ரஷ்யா எங்களை சுற்றிவளைத்துள்ளது... புடினிடம் பேசுங்கள்: உக்ரைன் ஜனாதிபதி மேக்ரானிடம் கேட்கும் வீடியோ வைரல்
ரஷ்யா எங்களை சுற்றிவளைத்துள்ளது, புடினிடம் பேசுங்கள், அவர் போரை நிறுத்துவார் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானிடம் உக்ரைன் ஜனாதிபதி கேட்கும் வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது.
ரஷ்யா எங்களை சுற்றிவளைத்துள்ளது...
உக்ரைன் போர் தொடர்பில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானிடம் உக்ரைன் ஜனாதிபதி உதவி கோரும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
அது எப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால், அது போரின் துவக்கத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
அந்த வீடியோவில், உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, மிகுந்த நம்பிக்கையுடன் போரை நிறுத்த உதவுமாறு மேக்ரானிடம் தொலைபேசியில் உரையாடுவது பதிவாகியுள்ளது.
ரஷ்யா எங்களை சுற்றிவளைத்துள்ளது, விமானங்களும் ஹெலிகொப்டர்களும் சுற்றிவருகின்றன. புடினிடம் பேசுங்கள், அது மிகவும் அவசியம், நீங்களும், உங்கள் கூட்டாளர்களும், ஐரோப்பிய நாடுகளும் சொன்னால் அவர் நிச்சயம் கேட்பார். அவர் போரை நிறுத்துவார் என்று ஜெலன்ஸ்கி கூறுவதைக் கேட்கலாம்.
மாறிய உக்ரைனின் நிலைமை
அப்போது மேக்ரான் ஜெலன்ஸ்கியிடம், நீங்கள் சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தயாரா என்று கேட்கிறார். அதற்கு ஜெலன்ஸ்கி, ஆம் நாங்கள் தயார் என்கிறார்.
விடயம் என்னவென்றால், போர் துவங்கிய காலகட்டத்தில் உக்ரைன், ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே இருந்துள்ளது என்பதை இந்த வீடியோவிலிருந்தும் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடிகிறது.
ஆனால், ஜெலன்ஸ்கியின் நடவடிக்கையில் இப்போது மாற்றம் தெரிகிறது. போர் துவங்கிய காலகட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு ஜெலன்ஸ்கி தயாராகவே இருந்ததாகவும், ஆனால், மேற்கத்திய நாடுகள், சமாதானப் பேச்சுவார்த்தை வேண்டாம் என ஜெலன்ஸ்கிக்கு அறிவுரை கூறியதாகவும் கூறப்படுகிறது. விளைவு, இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின, இன்னமும் பலியாகிக்கொண்டும் இருக்கின்றன என்பது சோகம்தான்.