உக்ரைன் அகதிகளில் 90 சதவீதம் பெண்கள், குழந்தைகள் தான்! ஐ.நா. தகவல்
உக்ரைனில் இருந்து 60 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளதாகவும், அவர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள்:பிப்ரவரி 24 அன்று ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறி அகதிகளாக வெவ்வேறு நாட்களுக்கு சென்றுள்ளனர் என்று ஐநா அகதிகள் அமைப்பின் புள்ளிவிவரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
மே 11 நிலவரப்படி மொத்தம் 6,029,705 பேர் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர். பலர் தங்கள் பயணத்தைத் தொடரும் முன் அண்டை நாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்று ஏஜென்சியின் பிரத்யேக இணையதளம் தெரிவிக்கிறது, குறிப்பாக போலந்து நாட்டிற்கு அதிக எண்ணிக்கையில் சென்றுள்ளனர்.
வெளியேறியவர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 18-60 வயதுடைய உக்ரேனிய ஆண்கள் இராணுவ சேவைக்கு தகுதியுடையவர்கள் என்பதால் அவர்களால் நாட்டை விட்டு வெளியேற முடியவில்லை.
மேலும், 8 மில்லியன் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர் என்று சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது.
போர் வெடித்ததில் இருந்து உக்ரைனின் எல்லைகளில் தினசரி அகதிகள் வருகை கணிசமாக குறைந்துள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும், கிட்டத்தட்ட 3.4 மில்லியன் உக்ரேனியர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறினர். அந்த எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் சுமார் 1.5 மில்லியனாகக் குறைந்தது.
மே மாத தொடக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட 493,000 உக்ரேனியர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த ஆண்டு உக்ரைனில் இருந்து எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளியேறக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.
உக்ரைனின் போருக்கு முந்தைய மக்கள் தொகை 37 மில்லியனாக இருந்தது, இணைக்கப்பட்ட கிரிமியா தீபகற்பம் மற்றும் ரஷ்யா சார்பு பிரிவினைவாதிகளால் கட்டுப்படுத்தப்படும் கிழக்கில் உள்ள இரண்டு பிரிவினைவாத பகுதிகளைத் தவிர்த்து இது கணக்கிடப்பட்டுள்ளது.