நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு விவகாரம்: திட்டவட்டமாக மறுத்த உக்ரைன்
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பில் உக்ரைன் அரசுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.
நோர்ட் ஸ்ட்ரீம் விவகாரம்
கடந்த 2022ம் ஆண்டு உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கிய பிறகு, ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு செல்லும் நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 எரிவாயு குழாய்கள் சந்தேகத்திற்குரிய வகையில் வெடி வைத்து சேதப்படுத்தப்பட்டது.
இது ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு வழங்கும் முக்கிய வழித்தடமாக பார்க்கப்பட்ட நிலையில், இந்த வெடிப்பு சம்பவம் அரங்கேறியது.

இந்த விவகாரத்தில் முன்னாள் உக்ரைனிய ராணுவ வீரர் செர்ஹி கே கடந்த ஆண்டு இத்தாலியில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் கடந்த நவம்பர் மாதம் ஜேர்மனியிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ரஷ்யாவின் போருக்கான நிதி ஆதாரத்தை தடுத்து நிறுத்தும் முயற்சியாக சக உக்ரைனிய ராணுவ வீரர்களுடன் இணைந்து நோர்ட் ஸ்ட்ரீம் குழாயை வெடி வைத்து தகர்த்து இருப்பதாக ஜேர்மனி குற்றம்சாட்டியுள்ளது.
மேலும் இந்த செயலை உக்ரைனிய அரசு உத்தரவின் பேரில் இதனை செர்ஹி.கே செய்து இருக்கலாம் என்றும் ஜேர்மனி சந்தேகிக்கிறது, ஆனால் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
உக்ரைன் திட்டவட்டமாக மறுப்பு
இந்நிலையில், நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பில் உக்ரைன் அரசுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை அந்நாட்டின் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தங்கள் தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில், உக்ரைனுக்கு அரசுக்கு எந்தவொரு ஆதாரங்களும் கிடைக்கவில்லை, ஆனால் அதே சமயம் விசாரணை இன்னும் முழுமையடையவில்லை. ஆதாரங்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருவதாக வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் இதில் ஜேர்மனியுடன் இணைந்து செயல்பட கூட்டு விசாரணை குழுவை அமைக்க உக்ரைன் முன்வந்துள்ளது.
அத்துடன் ஜேர்மன் அதிகாரிகளுக்கு இது தொடர்பான விசாரணையில் முழு ஒத்துழைப்பு வழங்கவும் உக்ரைன் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |