உக்ரைன் - ரஷ்யா இடையே எல்லையில் வெடித்த மோதல்: 15 பேர் உயிரிழப்பு
உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்ற எல்லையோர மோதலில் 15 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைன் - ரஷ்யா இடையே வெடித்த மோதல்
உக்ரைன் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் எல்லையோரப் பகுதிகளில் நடந்த தொடர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 15 பேர் வரை கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் மோதல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போதைய இந்த மோதல் நிலைமையை தீவிரப்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்கு கீழ் உள்ள ஜபோரிஜியா பகுதியில் உள்ள முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக மாஸ்கோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த தாக்குதலில் 19 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக உக்ரைனிய தரப்பு எந்தவொரு தகவலையும் இதுவரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாப்பிங் மால் மீது தாக்குதல்
அதே சமயம் தென்கிழக்கு உக்ரைனிய பகுதியான ஜபோரிஜியாவில் நடந்த ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் ஹாப்பிங் மால் ஒன்றில் தீப்பிடித்தது.
தீயானது ஷாப்பிங் மாலின் 500 சதுர மீட்டர் பரப்பளவு வரை பரவியதில் பலர் காயமடைந்து இருப்பதாக பிராந்திய தலைவர் இவான் ஃபெடரோவ் தகவல் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை உக்ரைனின் சுமி பிராந்தியத்தில் நடந்த ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் 3 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் உக்ரைனியன் ட்ரோன் சேமிப்பு மற்றும் ஏவுதளத்தை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |