உக்ரைன் 177 - ரஷ்யா 118: நூற்றுக்கணக்கான ட்ரோன்களால் மாறி மாறி மோதிக் கொண்டதால் பரபரப்பு
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் நுற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவி மோதிக் கொண்டது எல்லையில் மீண்டும் பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.
ரஷ்யாவின் 110 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்
நள்ளிரவில் உக்ரைனிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா கிட்டத்தட்ட 118 ட்ரோன்களை ஏவி இருப்பதாக உக்ரைனிய விமானப்படை அறிவித்துள்ளது.
ஏவப்பட்ட ட்ரோன்களில் 110 ட்ரோன்களை உக்ரைனிய விமானப்படை வெற்றிகரமாக இடைமறித்து அழித்து விட்டதாக தெரிவித்துள்ளது.

பல்வேறு பாதுகாப்பு முயற்சிகளுக்கு பிறகும், 3 ரஷ்ய ட்ரோன்கள் தங்களது இலக்குகளை அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடைமறிக்கப்பட்ட ட்ரோன்களின் சிதைவுகள் 6 இடங்களில் விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.
177 உக்ரைனிய ட்ரோன்களை வீழ்த்திய ரஷ்யா
இதற்கிடையில், ரஷ்ய எல்லைக்குள் நுழைந்த 177 உக்ரைனிய ட்ரோன்களை இடைமறித்து அழித்து இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த ட்ரோன்கள் மாஸ்கோ, பெல்கோரோட், குர்ஸ்க், ரியாசான் போன்ற நகரங்களை குறிவைத்து ஏவப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
மொத்தமாக எத்தனை ட்ரோன்களை ரஷ்ய ராணுவம் இடைமறித்தது என்று அறிவித்து இருந்தாலும் எந்தெந்த பகுதியில் எத்தனை ட்ரோன்கள் அழிக்கப்பட்டது என்ற தகவலை ரஷ்யா வெளியிடவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |