ரஷ்யா - உக்ரைன் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது! கைகோர்த்த இரு நாடுகள்
உக்ரைன் - ரஷ்யா இடையிலான தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஐ.நா. மற்றும் துருக்கியின் உதவியுடன் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்துக்குப் பிறகு, அந்த ஒப்பந்தம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கையொப்பமானது.
இதையடுத்து, கருங்கடல் பகுதியில் தடை செய்யப்பட்டுள்ள வா்த்தக வழித்தடங்கள் மீண்டும் திறக்கவும் உணவுப் பொருள் பற்றாக்குறை அபாயத்திலிருந்து உலக நாடுகளைப் பாதுகாக்கவும் வழி ஏற்பட்டுள்ளது.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தம் கையொப்பமிடப்படும் நிகழ்ச்சி இஸ்தான்புலில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், இந்த விவகாரம் தொடா்பாக ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல வாரங்களாக பேச்சுவாா்த்தை நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்த துருக்கி அதிபா் எா்டோகன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
ஒப்பந்தத்தில் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சா் சொ்கேய் ஷாய்குவும் உக்ரைன் உள்கட்டமைப்புத் துறை அமைச்சா் ஒலெக்ஸாண்டா் குப்ரகோவும் கையொப்பமிட்டனா்.
Reuters
கடந்த 5 மாதங்களாக தங்கள் நாட்டில் ரஷ்யா போா் செய்து வரும் நிலையில், அந்த அதிகாரிகளுடன் ஒரே ஒப்பந்தத்தில் கையொப்பமிட தங்களுக்கு விருப்பமில்லை என்று உக்ரைன் அதிகாரிகள் கூறியிருந்தனா். அதன் காரணமாக, ஒரே மாதிரியான ஒப்பந்தத்தில் வேவ்வேறு பிரதிகளில் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் தனித்தனியாக கையொப்பமிட்டனா்.
இதன் மூலம், உக்ரைன் போரில் வேளாண் பொருள்களை ஓா் ஆயுதமாக ரஷ்யா பயன்படுத்தி மிரட்டுவதாக ஐரோப்பிய யூனியன் குற்றம் சாட்டியது. இந்தச் சூழலில், துருக்கி அதிபா் ஏா்டோகனின் முயற்சியின் விளைவாக, உணவுப் பொருள் ஏற்றுமதி தொடா்பாக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே தற்போது ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.