எல்லையில் நுழைந்த 2 உக்ரைனிய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்திய ரஷ்ய ராணுவம்
ரஷ்ய எல்லைக்கு அருகே பறந்த இரண்டு உக்ரைனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைனிய ட்ரோன்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் ட்ரோன் தாக்குதல் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. இருநாடுகளும் மாறி மாறி ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய எல்லைப்புற பகுதியில் நுழைந்த இரண்டு உக்ரைனிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாஸ்கோவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ள தகவலில், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் 2 ஆளில்லா ட்ரோன் விமானங்கள் பிரையன்ஸ்க் மற்றும் குர்ஸ்க் பிராந்தியங்களில் சுற்றித் திரிந்தது கண்டறியப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டது என அறிவித்துள்ளது.
இதற்கிடையில் உக்ரைனிய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள குர்ஸ்க் பிராந்தியத்தின் கவர்னர், இரவில் குர்ஸ்க் நகர குடியிருப்பு அடுக்குமாடி கட்டிடத்தின் மீது ட்ரோன் ஒன்று மோதியதாக தெரிவித்துள்ளார்.
இதில் உயிரிழப்புகள், காயங்கள் என யாருக்கும் பாதிப்புகள் இல்லை என்றும், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சில தளங்களின் ஜன்னல் கண்ணாடி மட்டும் உடைந்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
குர்ஸ்க் கவர்னர் குறிப்பிட்டது, முன்னதாக பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்ட ட்ரோன்களில் ஒன்றா என்று தெளிவாக தெரியவில்லை.
ஆனால் வெடிமருந்துடன் வந்த ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ரஷ்யர் ஒருவர் கொல்லப்பட்டதாக பெல்கோரோட் பிராந்திய கவர்னர் தெரிவித்திருந்த பிறகு ரஷ்யாவின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |