மத்திய கிழக்கு நாடொன்றில் அமெரிக்க தளங்களைப் பாதுகாக்கும் உக்ரைன் நிபுணர்கள்
மத்திய கிழக்கு நாடான ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்களைப் பாதுகாக்க interceptor ட்ரோன்கள் மற்றும் நிபுணர்களை கடந்த வாரம் அனுப்பியதாக உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார்.
உதவி கோரிய அமெரிக்கா
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் 10வது நாளாகத் தொடரும் நிலையில், உக்ரேனிடம் உதவி கேட்ட 11 நாடுகளில் ஜோர்டானும் ஒன்று.

ஈரானால் தாக்கப்படும் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் உக்ரைன் உறவுகளை மேம்படுத்த முயற்சிக்கும் நிலையில், ஜோர்டானைப் பாதுகாப்பதில் உதவி கோரிய அமெரிக்காவின் கோரிக்கைக்கு கடந்த வாரம் பதிலளித்ததாக ஜெலென்ஸ்கி ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் ஈரானின் அண்டை நாடுகளிடமிருந்து 11 கோரிக்கைகள் பெறப்பட்டதாக ஜெலென்ஸ்கி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
ஜோர்டானைப் பொருத்தமட்டில், அங்கு அமெரிக்கா முவாஃபாக் சால்டி விமான தளத்தில் கணிசமான இருப்பைப் பராமரித்து வருகிறது, வியாழக்கிழமை உதவிகள் கோரப்பட்டதாகவும் ஜெலென்ஸ்கி நியூயார்க் டைம்ஸிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து அடுத்த நாளே நிபுணர்கள் குழு புறப்பட்டுள்ளதாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். ஜோர்டானில் உள்ள அமெரிக்க தாட் வான் பாதுகாப்பு அமைப்பால் பயன்படுத்தப்பட்ட ரேடார் ஈரானிய தாக்குதல்களால் சேதமடைந்தது அல்லது செயலிழந்து போனது.
ரஷ்யா ஈரானுடன் தாக்கும் இலக்கு தொடர்பானத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது என்ற அமெரிக்காவின் அறிக்கைகளுக்கு மத்தியில், ஈரானும் ரஷ்யாவும் நட்புறவு கொண்ட நாடுகள் என்பதையும் ஜெலென்ஸ்கி அங்கீகரிக்கிறார்.
ஈரானுக்கு ரஷ்யா உதவும் என்றால், அமெரிக்காவின் தளங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்க உக்ரைன் களமிறங்குவதில் வியப்பில்லை என்கிறார் ஒரு நிபுணர்.
வெளியான தகவல்களின் அடிப்படையில் கடந்த வாரத்தில், உக்ரைன் ஜனாதிபதி சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன், கத்தார் மற்றும் ஜோர்டான் தலைவர்களுடன் பேசியுள்ளார்.
ஷாஹெத் ட்ரோன்
ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் பாதுகாப்பிற்காக ஒருங்கிணைவது மிகவும் முக்கியம் என்று சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் பேசிய பிறகு ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
2024 செப்டம்பர் முதல் ஒவ்வொரு இரவும் ஷாஹெத்-136 ட்ரோன்களால் தொடர்ச்சியானத் தாக்குதல்களை உக்ரைன் எதிர்கொண்டு வந்துள்ளது. ஈரானால் வடிவமைக்கப்பட்ட இந்த ட்ரோன்கள், ரஷ்யாவிடம் தொழில்நுட்பம் அளிக்கப்பட்டதை அடுத்து பல எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டது.

ஷாஹெத் ட்ரோன் தாக்குதலில் இருந்து தப்பிக்க உக்ரைன் குறைந்த விலை வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் 90 சதவீதம் வரையில் முறியடிக்கவும் முடிந்தது.
தற்போது ஈரான் தாக்குதல்களை முறியடிக்க அமெரிக்க தயாரிப்பான Patriot மற்றும் Thaad வான் பாதுகாப்பு அமைப்புகளை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.
ஈரான் தயாரிப்பு ட்ரோன்களின் மதிப்பு 50,000 டொலர் என்றால், ஒவ்வொரு Patriot அமைப்புக்கும் 4 மில்லியன் டொலர் செலவிடப்படுகிறது. முதல் மூன்று நாட்களில் மட்டும் 800 முறை Patriot பயன்படுத்தப்பட்டுள்ளது என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |