"நான் 2 குழந்தைகளுக்கு தந்தை" ரஷ்யா குற்றச்சாட்டை மறுத்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி
உக்ரைனில் இரசாயன ஆயுதங்கள் அல்லது பேரழிவு ஆயுதங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை என்று அந்நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று கூறியுள்ளார்.
மேலும், உயிரியல் ஆயுதங்களை தனது நாட்டிற்கு எதிராக பயன்படுத்தினால் "மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகள்" விதிக்கப்படும் என்று ரஷ்யாவை எச்சரித்துள்ளார் ஜெலென்ஸ்கி.
அமெரிக்காவின் உதவியுடன் உக்ரைனில் உயிரியல் ஆயுதங்களை உருவாக்குவது குறித்து ஆராய்ச்சி நடந்துவருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. அதனை தெளிவுபடுத்தும் விதமாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பேசியுள்ளார்.
தான் ஒரு வளமான நாட்டின் ஜனாதிபதி, மேலும் இரண்டு குழந்தைகளின் தந்தை கூறிய ஜெலென்ஸ்கி, " எனது நிலத்தில் இரசாயன அல்லது பிற பேரழிவு ஆயுதங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை" என்று இன்று காலை வெளியிடப்பட்ட வீடியோவில் கூறினார்.
"உலகம் முழுவதற்கும் அது தெரியும். அது உங்களுக்குத் தெரியும். ரஷ்யா எங்களுக்கு எதிராக ஏதாவது செய்தால், அது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளைப் பெறும்," என்று அவர் கூறினார்.
ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு முன்னதாக நேற்று அமெரிக்க தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ரஷ்யா தான் தனது ரசாயன தாக்குதல் திட்டத்தை செயல்படுத்த தந்திரமாக அமெரிக்கா மற்றும் உக்ரைன் மீது குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது. இதனை காரணமாக வைத்து ரஷ்யா உக்ரைனில் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுத தாக்குதல்களை நடத்தலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதனிடையே, உக்ரைனைப் போலவே நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியனிலும் சேருவதை நோக்கமாகக் கொண்ட மற்றொரு முன்னாள் சோவியத் குடியரசான ஜார்ஜியாவில் உள்ள ஒரு ஆய்வகத்தில் அமெரிக்கா உயிரியல் பரிசோதனைகளை ரகசியமாக மேற்கொள்வதாக ரஷ்யா மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.