குவிந்து கிடக்கும் தானியங்கள்... கண்ணீர் வடிக்கும் உக்ரைன் விவாசாயிகள்
உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தில் குவிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான டன் தானிய கையிருப்பை ஏற்றுமதி செய்ய உக்ரேனிய விவசாயிகள் மாற்று வழியை தேடி வருகின்றனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்ந்துவரும் நிலையில், கிழக்கு கிராமங்களில் உள்ள உக்ரேனிய மக்கள் தாக்குதல் அபாயம் இருந்தபோதிலும் கோதுமை வயல்களை விட்டு வெளியேறமால் காவல் காத்து வருகின்றனர்.
மட்டுமின்றி, ரஷ்ய குண்டுவீச்சுகளால் பாதிக்கப்பட்ட லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பகுதி விவசாயிகள் தொடர்ந்து விவசாயப் பணிகளை மேற்கொண்டு தான் வருகின்றனர்.
ஆனால் கடந்த ஆண்டு அறுவடை முடிவடைந்த தானியங்களையும் இதுவரை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். இன்னும் 20 நாட்களில் அடுத்த அறுவடை தொடங்கும் எனவும், சேமிப்பு கிடங்களில் இடம் பற்றாக்குறை இந்த முறை பேரிழப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சத்தையும் விவசாயிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
உலக தானிய ஏற்றுமதியாளர்களான ரஷ்யாவும் உக்ரைனும் கடந்த ஆண்டு உலக அளவில் கோதுமை ஏற்றுமதியில் மட்டும் 30% அளவுக்கு பங்காற்றியுள்ளனர். குண்டுவீச்சு, தானிய கிடங்குகளில் கொள்ளை என ரஷ்யாவின் அட்டூழியங்கள் இருப்பினும், விவசாய உற்பத்தி முன்னெடுக்கப்பட்டு வருவதாக விவசாயி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இவரது கோதுமை வயல் இருந்த பகுதி சமீபத்தில் ரஷ்ய குண்டுவீச்சு இலக்கானது. பிப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் முன்னர் கோதுமை உள்ளிட்ட தானியங்களை விற்பனை செய்வது என்பது மிக எளிதான விடயம் என குறிப்பிட்டுள்ள 34 வயதான விவசாயி ஒருவர், பெரும் நிறுவனங்கள் தங்கள் பகுதிக்கு நேரடியாகவே வந்து உள்ளூர் தானியங்களை கொள்முதல் செய்து செல்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும், போர் காரணமாக உள்ளூர் போக்குவரத்தும் தடைபட்டுள்ளதால், கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். போர் வராமல் போயிருந்தால், கடந்த பிப்ரவரி மாதமே தானிய கிடங்குகளில் தற்போது தேங்கியுள்ள தானியங்கள் அனைத்தும் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கும் எனவும், புதிதாக அறுவடை செய்யவிருக்கும் தானியங்களை சேமிக்க இடம் இருந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது சில நிறுவனங்கள் தானியங்களை கொள்முதல் செய்வதில் ஆர்வம் தெரிவித்துள்ளதாகவும், ஜெலென்ஸ்கி நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் தானியங்களை கருங்கடல் வழியாக ஏற்றுமதிக்கு உதவ தயார் என ரஷ்யா அறிவித்தாலும், தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை விளாடிமிர் புடின் நிர்வாகம் முன்வைத்து வருகிறது.