கொத்தாக கொல்லப்பட்ட உக்ரேனிய துருப்புகள்: இராணுவ முகாம்கள் பல சேதம்
உக்ரைனின் 17 இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் முன்னெடுத்துள்ளதாக ரஷ்ய இராணுவத் தலைமை தகவல் வெளியிட்டுள்ளது.
அதி நவீன ஏவுகணைகளால் முன்னெடுக்கப்பட்ட குறித்த தாக்குதலில் உக்ரைனின் ரோக்கட் சேமிப்பு கிடங்கு மற்றும் இராணுவ முகாம் உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தகவலில், பகலில் ரஷ்ய விமானப்படை முன்னெடுத்த தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்ட உக்ரேனிய துருப்புக்கள் கொல்லப்பட்டதாகவும், 23 கவச வாகனங்களை அழித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், ரஷ்ய ஏவுகணையால் தாக்கப்பட்டதாக உள்ளூர் கவர்னர் மாக்சிம் மார்சென்கோ கூறிய ஒடெசா விமான நிலையத்தின் மீதான தாக்குதல் பற்றி எதுவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
முன்னதாக சனிக்கிழமையன்று, தெற்கு உக்ரைனில் உள்ள ஒடெசா விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைத் தாக்குதலானது ஓடுபாதையை மொத்தமாக அழித்ததாக கவர்னர் மார்சென்கோ தெரிவித்துள்ளார்.
மேலும், கிரிமியா பகுதியில் இருந்து எதிரி நாடு ஏவுகணைத் தாக்குதலை முன்னெடுத்ததாகவும், இதில் ஒடெசா விமான நிலைய ஓடுதளம் மொத்தமாக சேதமடைந்துள்ளதாகவும், அதிர்ஷ்டவசமாக உயிரபாயம் ஏதும் இல்லை என அவர் தமது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.