ரஷ்ய இராணுவ வீரரை தைரியமாக நேருக்கு நேர் எதிர்கொண்ட உக்ரைன் பெண்: அவர் கூறிய துணிச்சலான வார்த்தைகள்
உக்ரைனுக்குள் ஊடுருவிய ரஷ்ய இராணுவ வீரர் ஒருவரை துணிச்சலுடன் எதிர்கொண்ட உக்ரைன் பெண்மணிக்கு பாராட்டுகள் குவிகின்றன.
உக்ரைனிலுள்ள Henichesk என்ற நகரில் நிற்கும் ரஷ்ய இராணுவ வீரர் ஒருவரை தைரியமாக எதிர்கொண்ட அந்த பெண்மணி, என் நாட்டுக்குள் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என சத்தமாக கேள்வி எழுப்புவதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
சற்றும் பயமில்லாத அந்தப் பெண், ஆயுதங்களுடன் நிற்கும் இராணுவ வீரர் ஒருவரை அணுகி, என் நாட்டுக்குள் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என சத்தமிட, தர்மசங்கடமாக உணரும் அந்த வீரர் அவரை சமாதானப்படுத்தும் வகையில் பேசுகிறார்.
அங்கிருந்து நகர முயன்ற அந்தப் பெண்ணோ, மீண்டும் அவரிடம் சென்று, ஒன்று செய்யுங்கள், சூரியகாந்தி விதைகளை உங்கள் பாக்கெட்களுக்குள் போட்டுக் கொள்ளுங்கள், நீங்கள் உயிரிழந்த பிறகு, அவை உக்ரைன் மண்ணில் வளரட்டும் என கூறுகிறார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், அவருக்கு பாராட்டுகள் குவிவதுடன், உங்கள் தைரியம் பாரட்டத்தக்கது, நன்றி, நாங்களும் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறோம் என பலர் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.