மொபைலில் பேசிக்கொண்டே போக்குவரத்தினூடே சாலையைக் கடந்த பெண்... அடுத்து நடந்த பயங்கரம்: பதற வைக்கும் ஒரு வீடியோ
உக்ரைனில், போக்குவரத்து நெரிசல் மிக்க ஒரு சாலையைக் கடக்கும்போது, மொபைலில் கவனம் செலுத்தியதால் மரணத்தின் விளிம்புக்கே சென்று திரும்பினார் இளம்பெண் ஒருவர்.
வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், போக்குவரத்து நெரிசல் மிக்க சாலை ஒன்றில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பதைப் பயன்படுத்தி இளம்பெண் ஒருவர் சாலையைக் கடக்க முயல்வதைக் காணலாம்.
ஆனால், அவர் தனது மொபைலில் பேசிக்கொண்டே சென்றதால், தனக்குப் பின்னால் நின்ற ட்ரக் நகர்வதை கவனிக்கத் தவறிவிட்டார். அந்த ட்ரக் உயரமாக இருந்ததால், அந்த ட்ரக்கின் சாரதிக்கும் அந்த பெண் நிற்பது தெரியவில்லை.
திடீரென ட்ரக் நகர, ட்ரக் அந்தப் பெண் மீது மோத, அந்தப் பெண் கீழே விழ, கிட்டத்தட்ட ட்ரக்கின் சக்கரங்கள் அவர் தலையை நெருங்கும் திகில் காட்சியை அந்த வீடியோவில் காணலாம். பின்னர், படுகாயமடைந்த நிலையில் அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மட்டும் கூறப்படுகிறது.
அதற்குப் பின் அவருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. பொலிசார் எவ்வளவு எச்சரித்தும், மொபைல் போன்கள் மீது கவனம் செலுத்துவதால் நிகழும் இதுபோன்ற விபத்துக்கள் இன்னும் தொடர்ந்துகொண்டிருப்பது வேதனைக்குரிய விடயமே.