பிரான்சில் இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் குட்டு
பிரான்சில் பொலிசாரால் சுட்டுகொல்லப்பட்ட இளைஞர் விவகாரத்தில், பிரான்சுக்கு ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் குட்டுவைத்துள்ளது.
பிரான்சுக்கு ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் குட்டு
செவ்வாய்க்கிழமையன்று பிரான்சில் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட Nahel என்னும் 17 வயது இளைஞர், அல்ஜீரிய மற்றும் மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார்.
அந்த இளைஞரை பொலிசார் சுட்டுக்கொன்றது தொடர்பாக பிரான்ஸ் முழுவதும் நடைபெற்றுவரும் கலவரங்கள் மற்றும் போராட்டங்களைத் தொடர்ந்து, ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் (OHCHR), இது, பிரான்ஸ் பொலிஸ் துறையில் நிலவும் இனவெறி குறித்துக் கவலைப்படவேண்டிய நேரம் என்று கூறியுள்ளது.
நேற்று, வெள்ளிக்கிழமையன்று ஜெனீவாவில் மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஸ்தானிகரின் செய்தித்தொடர்பாளரான ரவீனா ஷம்தாசனி ( Ravina Shamdasani) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், செவ்வாயன்று 17 வயதான Nahel கொல்லப்பட்டது குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இனவெறுப்பு மற்றும் பாரபட்சக் குற்றச்சாட்டு
இது பொலிஸ் துறையில் இனவெறி மற்றும் பாரபட்சம் ஆகிய ஆழமான பிரச்சினைகளை பிரான்ஸ் தீவிரமாக கருத்தில் கொள்ளவேண்டிய தருணம் என்று கூறியுள்ளார் ரவீனா ஷம்தாசனி.
பிரச்சினைகளுக்கெதிராக அமைதி வழியில் கூடுவதன் முக்கியத்துவத்தையும் நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ள அவர், ஆர்ப்பாட்டங்களின்போது வன்முறையை எதிர்கொள்ள காவல்துறை பலத்தைப் பிரயோகிக்கும்போது, உண்மையாகவே அது தேவையா என்பதையும், அவ்வாறு பலத்தைப் பிரயோகிக்கும்போது, அது சட்டத்துக்குட்பட்டு செய்யப்படுகிறதா, பாரபட்சம் காட்டப்படுகிறதா என்பது போன்ற விடயங்களை உறுதிசெய்யுமாறு அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார் அவர்.
பிரான்சின் பொலிஸ் துறை ஒழுங்குமுறை அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2021 இல் மட்டுமே, பொலிஸ் நடவடிக்கைகளின் போது 37 இறப்புகள் பதிவாகியுள்ளன, அவர்களில் பத்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |