ஆரம்பமே இப்ப தான்.. ஆப்கானிஸ்தானில் நிலைமை குறித்து ஐநா பகிரங்க எச்சரிக்கை
காபூலில் இருந்து சர்வதேச விமானப் போக்குவரத்து முடிவடையும் நிலையில், ஆப்கானிஸ்தானில் மிகப் பெரிய மனிதாபிமான நெருக்கடி இப்போது தான் தொடங்குகிறது என்று ஐநா எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்களில் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களின் பயம் மற்றும் விரக்தியை வெளிப்படுத்தும் வகையில் காபூல் விமான நிலையத்தில் நடந்த சம்பங்கள் உலகெங்கும் இரக்கத்தை தூண்டின என அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் Filippo Grandi கூறினார்.
ஆனால் இந்த சம்பங்கள் நம் நினைவில் இருந்து மறைந்த பிறகும் ஆப்கானிஸ்தானில் சர்வதேச சமூகத்தின் உதவி வேண்டி மில்லியன் கணக்கானவர்கள் இருப்பார்கள்.
ஆப்கானிஸ்தானில் வாழும் 39 மில்லியன் மக்களில் சுமார் 3.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், அவர்களில் அரை மில்லியனுக்கும் அதிகமானோர் 2021ல் மட்டுமே இடம்பெயர்ந்துள்ளனர்.
எனவே உலகளாவிய சமூகம் மனிதாபிமான திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என Filippo Grandi வலியுறுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி ஓடி வருபவர்களுக்கு தங்கள் எல்லைகளைத் திறந்து வைக்குமாறு அவர் அண்டை நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால் மற்ற நாடுகள் இந்த மனிதாபிமானப் பொறுப்பைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என Filippo Grandi கூறியுள்ளார்.