சிதைக்கப்பட்ட குடியிருப்புகள்... பிணங்களை மீட்க முடியாமல் தவிப்பு: உக்ரைன் பயங்கரம்
உக்ரைனின் மரியுபோல் நகரம் ரஷ்ய துருப்புகளால் மொத்தமாக சிதைக்கப்பட்டுள்ள நிலையில், குடியிருப்பு கட்டிடங்களில் இருந்து இதுவரை பிணங்களை மீட்க முடியாமல் அதிகாரிகளும் உறவினர்கள் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் தலைநகரை இரண்டு நாட்களுக்குள் கைப்பற்றுவதாக களமிறங்கிய ரஷ்ய துருப்புகள் 24 நாட்களாக போரிட்டு வருகின்றனர். தலைநகர் கீவ்வை கைப்பற்ற முடியாமல் போன ஆத்திரத்தில் துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்ய துருப்புகள் சின்னாபின்னமாக்கியுள்ளது.
வரைபடத்தில் இருந்தே மொத்தமாக அழிக்கப்பட்ட நிலையில் சிதைந்துள்ளது மரியுபோல் நகரம். தற்போது, அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து, ரஷ்ய தாக்குதலில் சிக்கி பலியான உடல்களை இதுவரை மீட்க முடியாமல் உறவினர்களும் அதிகாரிகளும் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மரியுபோல் நகரை மொத்தமாக முற்றுகையிட்டுள்ள ரஷ்ய துருப்புகள், தொடர்ந்து தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. மேலும், கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக சுமார் 400,000 மக்கள் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மின்சாரம், தண்ணீர், உணவு என அடிப்படை தேவைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மரியுபோல் நகரில் தாக்குதலை தீவிரப்படுத்த இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. மரியுபோல் நகரில் மட்டும் ரஷ்ய தாக்குதலுக்கு இதுவரை 2,500 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.