10 கோடி குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவி: ரூ.990 கோடி நிதி திரட்டும் முயற்சியில் UNICEF
யுனிசெப் 10 கோடி குழந்தைகளுக்கான உதவிக்கு 990 கோடி ரூபாய் நிதி திரட்டும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.
ரூ.990 கோடி நிதி
உலகளாவிய குழந்தைகளின் நலனுக்காக செயல்படும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) தனது புதிய மனிதாபிமான பதில் மொழி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டில் உலகின் 146 நாடுகளில் உள்ள 10 கோடி 9 லட்சம் குழந்தைகளுக்கு உயிர் காக்கும் உதவிகளை வழங்க 990 கோடி ரூபாய் நிதியை திரட்ட முடிவு செய்துள்ளது.
வரும் ஆண்டில் பல நாடுகள் மோதல்கள், காலநிலை மாற்றம், இடப்பெயர்வு மற்றும் சுகாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலையில், இந்த நிதி மிகவும் அவசியமாகும் என யுனிசெப் தெரிவித்துள்ளது.
உலகளவில் 21 கோடி 30 லட்சம் குழந்தைகள் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலையில், இந்த நிதி மூலம் 10 கோடி 9 லட்சம் குழந்தைகளுக்கு உடனடி உதவிகள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள யுனிசெப் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் கேத்தரின் ரஸ்ஸல், குழந்தைகளின் மனிதாபிமான தேவைகள் வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, 2024ஆம் ஆண்டில் 5 கோடி 75 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் மோதல்கள் நிறைந்த பகுதிகளில் பிறந்துள்ளனர்.
2025ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், உடனடி நடவடிக்கை அவசியமாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |