திருச்சி உள்ளிட்ட 11 விமான நிலையங்கள் தனியார் மயம் - இந்திய அரசின் திட்டம் என்ன?
திருச்சி உள்ளிட்ட 11 விமான நிலையங்களை தனியார் மயமாக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது.
தமிழ்நாடு விமான நிலையங்கள்
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சியில் 4 சர்வதேச விமான நிலையங்களும், தூத்துக்குடி மற்றும் சேலத்தில் 2 உள்நாட்டு விமான நிலையங்களும் பயன்பாட்டில் உள்ளது.
மேலும், வேலூர், நெய்வேலி, தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் விமான நிலையம் அமைக்க இந்திய அரசு திட்டமிட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருச்சி உள்ளிட்ட 11 விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு விமான போக்குவரத்துறையின் இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளித்துள்ளார்.
தனியார் மயம்
அதில், திருச்சி, அமிர்தசரஸ், புவனேஸ்வர், வாரணாசி, ராய்ப்பூர் விமான நிலையங்கள் மற்றும் 6 சிறிய விமான நிலையங்களின் இயக்கம், நிர்வாகம் மற்றும் மேம்பாட்டு பணிகள் அரசு மற்றும் தனியார் பங்கேற்பு திட்டத்தின் கீழ் தனியார் வசம் ஒப்படைக்க அடையாளம் காணப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
2025-26 நிதியாண்டில் இந்த 11 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகை விடும் பணிகள் முடிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
நஷ்டத்தில் இயங்கும் விமான நிலையங்களுடன், லாபத்தில் இயங்கும் விமான நிலையங்களும் ஒரு தொகுப்பாக வழங்கப்படும்.
அதாவது லாபத்தில் இயங்கி வரும் புவனேஸ்வர், அமிர்தசரஸ் விமான நிலையங்களுடன் நஷ்டத்தில் இயங்கி வரும் ஹூப்ளி மற்றும் காங்ரா விமான நிலையங்கள் தொகுப்பாக அளிக்கப்படும்.
இதனால், நஷ்டத்தில் இயங்கும் விமான நிலையங்களிலும் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அவையும் லாபம் ஈட்டுவதாக மாற்றப்படும்.
அரசு சொத்துகளை பணமாக்கும் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, மதுரை விமான நிலையங்கள் உட்பட 25 விமான நிலையங்கள் பட்டியலில் உள்ளன. முதற்கட்டமாக இந்த 11 விமான நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |