மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் சிறை - இந்திய மாநிலத்தில் வினோத திட்டம்
மனிதர்களை கடிக்கும் தெரு நாய்களை ஆயுளுக்கும் அடைத்து வைக்கும் திட்டத்தை உத்திரப்பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
தெருநாய் கடி
சமீப காலமாக, இந்தியாவில் தெரு நாய் பிரச்சினை, பூதாகரமாக வெடித்துள்ளது. சாலைகளில் செல்பவர்களை தெரு நாய்கள் கடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.
இதனையடுத்து தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், டெல்லி - என்சிஆர் பகுதிகளில் உள்ள 10 லட்சம் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து, காப்பகத்தில் அடைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துவது, கருத்தடை செய்வது போன்ற முயற்சிகளில் மாநில அரசுகள் இறங்கியுள்ளது.
இதே போல், உத்திரப்பிரதேச மாநில அரசு தெரு நாய்களை கட்டுப்படுத்துவதில் வினோத உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இதன்படி, காரணமின்றி தெருவில் செல்லும் நபர்களை கடிக்கும் நாய்கள் முதலில் 10 நாட்களுக்கு காப்பகத்தில் அடைக்கப்படும். அங்கு, நாய்க்கு கருத்தடைசெய்யப்படவில்லையென்றால் கருத்தடை ஊசி செலுத்தப்படும்.
நாய்களுக்கு ஆயுள் சிறை
நாய் தற்காப்புக்காக கடித்ததா அல்லது காரணமின்றி கடித்ததா என்பதை கால்நடை மருத்துவரை உள்ளடக்கிய 3 பேர் கொண்ட குழு விசாரித்து முடிவு செய்யும்.
நாயின் நடவடிக்கைகள் 10 நாட்களுக்கு கண்காணிக்கப்படும். அதன் பின்னர் அதன் இருப்பிடத்தை கண்டறிய உடலில் மைக்ரோசிப் பொருத்தி நாய் விடுதலை செய்யப்படும்.
2வது முறையாக நாய் மீண்டும் யாரையாவது கடித்தால், நாய் அதன் ஆயுள் முழுவதும் காப்பகத்தில் அடைத்து வைக்கப்படும்.
யாரேனும் அந்த நாயை தத்தெடுக்க விரும்பினால் மட்டுமே, அந்த நாய் விடுதலை செய்யப்படும்.
அவ்வாறு தத்தெடுக்க விரும்புபவர்கள் நாயை இனி தெருவில் விட மாட்டேன் என்ற உறுதிமொழி பத்திரத்ம் சமர்ப்பிக்க வேண்டும்.
அவர்கள் நாயை தெருவில் விடப்பட்டது தெரிந்தால், அந்த நபர்களின் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
யாரேனும் கல்லெறிந்து, நாய் அவர்களை கடித்தால் அதற்காக நாயை பிடிக்க மாட்டோம், சாலைகளில் செல்பவர்களை காரணமின்றி கடிக்கும் நாய்களை மட்டுமே பிடிப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |