ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி
ஈரானில் இருந்து யூரேனியத்தை மீட்டு எடுப்போம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
டிரம்பின் புதிய நம்பிக்கை
திங்கட்கிழமையான நேற்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான இராஜதந்திர ஒப்பந்தம் குறித்த புதிய நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
அப்போது, இன்று காலை சரியான நபர்களிடம் இருந்து அழைப்பு வந்ததாகவும், அவர்கள் புதிய ஒப்பந்தத்தை எட்ட விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவால் தனித்து பாதுகாக்க முடியும் என்றாலும் பல்வேறு சர்வதேச நாடுகளும் இந்த விவகாரத்தில் உதவ முன்வந்து இருப்பதாக குறிப்பிட்டார்.

யூரேனியத்தை மீட்டெடுப்போம்
அணு ஆயுதம் வைத்திருப்பது தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமல் தடைப்பட்டது.
இந்நிலையில் ஈரான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு முன் வருவதாகவும், ஆனால் அமெரிக்கா தொடர்ந்து ஈரானின் அணுசக்தி திறனை முடக்குவதில் தீர்க்கமாக இருப்பதாகவும் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது டிரம்ப் வெளிப்படுத்தினார்.
மேலும் ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை திரும்ப பெறுவோம் அல்லது எப்படியாவது மீட்டெடுப்போம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஈரான் யூரேனியம் செறிவூட்டுவதை அமெரிக்கா எப்போதும் அனுமதிக்காது என்றும் தன்னுடைய உரையில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
கடல்வழி பாதுகாப்பு
வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க படைகளின் செயல்பாடுகளை நியாயப்படுத்திய டிரம்ப், உலகளாவிய கடல் வணிகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை நிரந்தரமாக திறப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் சர்வதேச அளவில் ஈரானின் மிரட்டல் அரசியலுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை இது என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |