ஹார்முஸ் நீரிணையில் திடீரென்று மாயமான அமெரிக்காவின் 200 மில்லியன் டொலர் ட்ரோன்
அமெரிக்காவின் மிகவும் விலையுயர்ந்த, MQ-4C டிரைட்டன் என்ற அமெரிக்க கடற்படையின் கண்காணிப்பு ட்ரோன், அவசர எச்சரிக்கையை விடுத்த சிறிது நேரத்திலேயே, ஹார்முஸ் நீரிணைக்கு மேலே காணாமல் போயுள்ளது.
ஈரானை நோக்கி
வெளியான தகவலின் அடிப்படையில், அந்த ட்ரோன், பாரசீக வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணையை சுமார் மூன்று மணி நேரம் கண்காணித்து முடித்துவிட்டு,

இத்தாலியில் உள்ள சிகோனெல்லா கடற்படை விமானத் தளத்தில் இருக்கும் தனது தளத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்ததாகவே கூறப்படுகிறது.
ஆனால் திடீரென்று, அந்த ட்ரோன் பொதுவான அவசரநிலை 7700 என்ற குறியீட்டை அனுப்பிவிட்டு, ஈரானை நோக்கி லேசாகத் திரும்பிக் கீழிறங்கத் தொடங்கியதாக புதிய தரவுகள் வெளியாகியுள்ளது.
அந்த ட்ரோன் மாயமாவதற்கு முன்பு வேகமாக தனது உயரத்தை இழந்து வந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த ட்ரோன் விபத்தில் சிக்கியுள்ளதா அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதா என்பது உறுதி செய்யப்படவில்லை.
அமெரிக்காவும் ஈரானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு, கப்பல் போக்குவரத்திற்காக ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க ஈரான் ஒப்புக்கொண்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்த ட்ரோன் காணாமல் போயுள்ளது.
20 எண்ணிக்கை
200 மில்லியன் டொலருக்கும் அதிகமான மதிப்புள்ள MQ-4C டிரைட்டன், வளைகுடாப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க மத்திய கட்டளைப் பகுதிக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரூ 1852 கோடி என்றே தெரிய வருகிறது.
பாரம்பரிய விமானங்களைப் போலல்லாமல், டிரைட்டன் ட்ரோன் முக்கியப் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் நீண்ட நேர உத்திசார் கண்காணிப்பை வழங்குகிறது.

டிரைட்டன் ட்ரோனானது 50,000 அடிக்கு மேலான உயரத்தில், 24 மணி நேரத்திற்கும் மேலாக 7,400 கடல் மைல்கள் தூரம் வரை பறக்கும் திறன் கொண்ட ஒரே தானியங்கி உயர் உயர, நீண்ட நேரத் தாங்குதிறன் (HALE) கடல்சார் விமானமாகும்.
2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்க கடற்படையிடம் MQ-4C டிரைட்டன் ட்ரோன்கள் 20 எண்ணிக்கை இருந்தன, மேலும் ஏழு ட்ரோன்களை வாங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |