உடனடியாக வெளியேறுங்கள்.... காபூலில் அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
காபூலில் உள்ள அமெரிக்கர்களுக்கு அமெரிக்க தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆகஸ்ட் 31ம் தேதியோடு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டு படைகள் வெளியேற வேண்டும் என தலிபான்கள் எச்சரித்துள்ள நிலையில், மக்களை வெளியேற்றும் பணிகளில் அமெரிக்க, பிரித்தானியா உட்பட வெளிநாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், காபூலில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு அந்நாட்டு தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள் அறிக்கையில், காபூல் விமான நிலையத்திற்கு வெளியே பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, அமெரிக்க குடிமக்கள் விமான நிலையத்திற்கு பயணிப்பதையும், விமான நிலைய நுழைவு வாயில்களுக்கு முன் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
விமான நிலையத்திற்கு வருமாறு அமெரிக்க அரசாங்கப் பிரதிநிதியிடமிருந்து நீங்கள் தனிப்பட்ட அறிவுறுத்தல்களைப் பெற்றால் மட்டுமே வர வேண்டும்.
காபூல் விமான நிலையத்தின் அபே கேட், கிழக்கு கேட் அல்லது வடக்கு கேட்டில் இருக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.