ரஷ்யாவிடம் 5,459..அமெரிக்காவிடம் 5,177 அணு ஆயுதங்கள்: எச்சரிக்கும் ஆயுதக் கட்டுப்பாட்டு இயக்குநர்
உலகின் 90 சதவீத அணு ஆயுதங்களை கொண்டுள்ள அமெரிக்காவும், ரஷ்யாவும் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பில் அலட்சியம் காட்டுவதாக ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
உலகின் மொத்த அணு ஆயுதங்களில்
அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பின் தரவுகளின்படி, ரஷ்யாவிடம் 5,459 அணு ஆயுதங்களும், அமெரிக்காவிடம் 5,177 அணு ஆயுதங்களும் உள்ளன. இந்த எண்ணிக்கையானது உலகத்தில் உள்ள மொத்த அணு ஆயுதங்களில் சுமார் 90 சதவீதம் ஆகும்.
புதிய START அல்லது மூலோபாய ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம், பயன்படுத்தப்படும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை 1,550 ஆகவும், அவற்றை ஏவும் அமைப்புகளின் எண்ணிக்கையை 800 ஆகவும் கட்டுப்படுத்தும் பரந்த விதிகளைக் கொண்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே இந்த ஒப்பந்தம் காலாவதியானதால், தங்களின் ஆயுதக் கிடங்குகள் எவ்வளவு பெரியதாக வளரலாம் மற்றும் எத்தனை அணு ஆயுதங்களை நிலைநிறுத்தலாம் என்பது குறித்த ஒரு குறிப்பிட்ட பரஸ்பர ஒப்பந்தம் இல்லாமல் உள்ளன.
மிகப்பெரிய தோல்வி
இதனைக் குறிப்பிட்டு ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டேரில் கிம்பால் கூறுகையில், "நாம் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையில் இருக்கிறோம், உலகத்தின் இரண்டு பெரிய அணு ஆயுத நாடுகளும் தங்களின் சில அடிப்படைப் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறுவது, என் பார்வையில் ஒரு மிகப்பெரிய தோல்வியாகும்" என தெரிவித்துள்ளார்.
பயன்படுத்தப்படாத கண்டம் விட்டு கண்டம் பாயும் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் கையிருப்புக்கு வரம்பு இல்லை, ஆனால் அவற்றை இரு தரப்பினரும் ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அணு ஆயுதக் கையிருப்புகளைக் கட்டுப்படுத்துவதில் ட்ரம்ப் இன்னும் ஆர்வமாக இருக்கிறார். ஆனால் பேச்சுவார்த்தைகளில் சீனாவையும் ஈடுபடுத்த விரும்புகிறார் என்று நிர்வாக அதிகாரி ஒருவர் 'தி மாஸ்கோ டைம்ஸ்' மற்றும் பிற ஊடகங்களிடம் தெரிவித்தார்.
மேலும், ஒரு புதிய அணு ஆயுதப் போட்டியின் பேரழிவுத் திறனைக் கருத்தில் கொண்டு, ஒரு சிறந்த ஒப்பந்தத்தைப் பெறும் நம்பிக்கையில் 'நியூ ஸ்டார்ட்' ஒப்பந்தத்தின் விதிகள் காலாவதியாக அனுமதிப்பது பொறுப்பற்ற செயல் என்று வல்லுநர்கள் 'தி மாஸ்கோ டைம்ஸ்' பத்திரிகையிடம் தெரிவித்தனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |