நெருப்பாக தகிக்கும் சீனா... தைவானுக்கு சாதகமான முடிவெடுத்த ட்ரம்ப் நிர்வாகம்
தைவானுக்கு 330 மில்லியன் டொலர்களுக்கு போர் விமானங்கள் மற்றும் பிற விமான பாகங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
அதிகாரப்பூர்வமற்ற உறவு
சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள இந்த ஆயுத விற்பனை விவகாரம், ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் முதல் முறை என்றே கூறப்படுகிறது.

பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்மொழியப்பட்ட இந்த விற்பனையானது, தைவானின் F-16, C-130 மற்றும் பிற விமானங்களுடன் கடற்படையின் செயல்பாட்டுத் தயார்நிலையைப் பராமரிப்பதன் மூலம் தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களைச் சந்திக்கும் திறனை மேம்படுத்தும் என குறிப்பிட்டுள்ளது.
சீனாவுடன் முறையான தூதரக உறவுகளைப் பேணும் அமெரிக்கா, தைவானுடன் அதிகாரப்பூர்வமற்ற உறவுகளைப் பேணுகிறது மற்றும் தைவானின் மிக முக்கியமான ஆயுத ஏற்றுமதியாளராகவும் உள்ளது.
மட்டுமின்றி, தைவானுக்கு ஒரு அச்சுறுத்தல் என்றால் தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை வழங்க அமெரிக்கா சட்டத்தால் கடமைப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தைவானுக்கு முறைப்படுத்தப்பட்ட ஆயுத விற்பனைக் கொள்கையைத் தொடர்ந்ததற்கும், தைவானின் தற்காப்புத் திறன்கள் மற்றும் மீள்தன்மையை மேம்படுத்துவதில் ஆதரவளிப்பதற்கும் அந்த நாட்டின் ஜனாதிபதி அலுவலகம் அமெரிக்க அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளது.

மேலும், தைவான்-அமெரிக்க பாதுகாப்பு கூட்டாண்மையை ஆழப்படுத்துவது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஒரு முக்கிய மூலைக்கல்லாகும் என ஜனாதிபதி அலுவலக செய்தித் தொடர்பாளர் கரேன் குவோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த விற்பனை ஒரு மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு வரும் என்று தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தைவானைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் மற்றும் வானில் சீன இராணுவம் தொடர்ந்து கண்காணிப்பு அல்லது ரோந்து பணிகளை மேற்கொள்கிறது. ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவுக்கான எதிர்ப்பை சீனா கோபத்துடன் பதிவு செய்துள்ளது.
தைவான் மக்கள்
ஜனநாயக ரீதியாக நிர்வகிக்கப்படும் தைவானை சீனா தனது சொந்தப் பிரதேசமாகக் கூறுகிறது, மேலும் தீவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இராணுவத்தைப் பயன்படுத்துவதையும் மறுக்கவில்லை.
சீனாவின் இந்த உரிமைகோரலை தைவான் அரசாங்கம் கடுமையாக எதிர்க்கிறது, மேலும் தைவான் மக்கள் மட்டுமே தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியும் என்று கூறி வருகிறது.

ஆனால், ட்ரம்ப் ஆட்சியில் இருக்கும் மட்டும், தைவான் விவகாரத்தில் எந்த முடிவை எடுக்கப் போவதில்லை என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வாக்களித்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் ட்ரம்பும் ஜி ஜின்பிங்கும் தென் கொரியாவில் சந்தித்த நிலையில், தைவான் விவகாரத்தில் இருவரும் ஏதேனும் முடிவெடுக்கலாம் என்ற அச்சம் பரவலாக எழுந்தது. ஆனால் இதுவரை அப்படியான தகவல் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |