வெனிசுலாவில் அதிரடி காட்டிய ட்ரம்ப் ஈரான் மீது கைவைக்க தயங்குவது ஏன்?
அமெரிக்கப் படைகள், வெனிசுலா ஜனாதிபதியின் வீட்டுக்குள்ளேயே நுழைந்து அவரைத் தூக்கிக்கொண்டுவந்த காட்சிகள் திரைப்படத்தை மிஞ்சுபவையாக இருந்தன என அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பே கூறியுள்ளார்.
வெனிசுலாவைத் தொடர்ந்து, கொலம்பியா, மெக்சிகோ என அடுத்தடுத்து திட்டம் வைத்துள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Credit : X.com
இந்நிலையில், ஈரானில் அரசுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள். ஈரான் மக்களுக்கு ஏதாவது மோசமாக நடந்தால் ஈரான் ஆட்சியாளர்களை கடுமையாக தாக்குவோம் என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.
ட்ரம்ப் ஈரான் மீது கைவைப்பாரா?
ஈரானுடைய ராணுவத்தை ஒப்பிடும்போது அமெரிக்க ராணுவம் மிக வலிமையானது. அமெரிக்கா நினைத்தால் ஈரான் ஆட்சியைக் கவிழ்க்கமுடியும். ஆனால், ட்ரம்ப் ஈரான் மீது கைவைக்கமாட்டார் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.

Credit : Reuters
ஏனென்றால், அமெரிக்கப் படைகள் தாக்கினால், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் கடும் பதிலடி கொடுப்பார்கள்.
ஈரான் தரப்பிலிருந்து தாறுமாறாக அமெரிக்கப் படைகள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் முதலான தாக்குதல்கள் நிகழ்த்தப்படும், ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்படும். அதனால், அவ்வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்கள் செல்ல முடியாமல் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை எக்கச்சக்கமாக உயரும்.

அடுத்ததாக, அமெரிக்கா ஈரானைத் தாக்கினால், ஈரானுக்கு ஆதரவாக ஈராக், சிரியா, ஏமன் மற்றும் லெபனான் ஆகிய நாடுகள் களத்தில் இறங்கும். சீனாவும் ரஷ்யாவும் எதிர்ப்பு தெரிவிக்கும். துருக்கியும் வளைகுடா நாடுகளும் கைகோர்க்க, மத்திய கிழக்கு பகுதிகளில் போர் உருவாகும் அபாயம் உள்ளது.
மேலும், ட்ரம்ப் வெனிசுலாவுக்கு ராணுவத்தை அனுப்பியதற்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு உருவாகியுள்ளது. அப்படியிருக்கும்போது, அவர் ஈரானைத் தாக்குவாரானால், ட்ரம்புக்கு எதிராக பதவிநீக்கத் தீர்மானம் கொண்டுவரவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.
அடுத்ததாக, ஈரானிலேயே ஆட்சியாளர்களுக்கு எதிர்ப்பு உள்ளது உண்மைதான் என்றாலும், ஆட்சியாளர்களை எதிர்க்கும் ஷியா பிரிவு மதத்தலைவர்கள், மற்றொரு நாடு ஈரானுக்குள் நுழைந்து ஆட்சியைக் கவிழ்க்க அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள்.

சொல்லப்போனால், அப்படி அமெரிக்கா ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்குமானால், இந்த ஷியா பிரிவு மதத்தலைவர்கள், தாங்கள் எதிர்க்கும் ஆட்சியாளர்களுடனேயே கைகோர்த்துக்கொண்டு அமெரிக்காவை எதிர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆக, ஈரானில் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது வெறுப்பு நிலவினாலும், அவர்கள் எக்காரணம் கொண்டு அமெரிக்கா தங்கள் உள்நாட்டு விவகாரங்களுக்குள் தலையிட அனுமதிக்கமாட்டார்கள்.
ஆகவேதான் ஈரான் மீது கைவைக்க அமெரிக்கா தயக்கம் காட்டுகிறது என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |