விளாடிமிர் புடினுக்கு அடுத்த இடியை இறக்கிய அமெரிக்கா... ஐரோப்பாவின் முடிவுக்கு ஆதரவு
உக்ரைனுக்கு உதவும் பொருட்டும் போரை முடிவுக்கு கொண்டுவரவும், முடக்கப்பட்டுள்ள ரஷ்ய சொத்துக்களை பயன்படுத்தவிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுக்கு அமெரிக்கா முழுமையாக ஆதரவளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆதரிப்பதாக தகவல்
உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யாவிற்கு அழுத்தமளிக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் 185 பில்லியன் யூரோக்கள் வரை பறிமுதல் செய்யாமல் பயன்படுத்த அனுமதிக்கும் ஒரு திட்டத்தை ஐரோப்பிய ஆணையம் முன்மொழிந்துள்ளது.

ஐரோப்பாவில் 210 பில்லியன் யூரோக்கள் அளவிலான ரஷ்ய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐரோப்பாவில் முடக்கப்பட்டுள்ள தங்கள் சொத்தில் உக்ரைனுக்காக செலவிடுவதை ரஷ்யா கடுமையாக எதிர்த்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த திட்டத்தை அமெரிக்காவும் ஆதரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022ல் உக்ரைன் மீதான போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யாவின் மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சகத்துடனான பரிவர்த்தனைகளைத் தடை செய்தன.
இதனால், ரஷ்யாவிற்கு சொந்தமான சுமார் 300 பில்லியன் டொலர் தொகை புடினால் தொட முடியாத நிலையில் உள்ளது. இந்த முடக்கப்பட்ட தொகையை உக்ரைனுக்கு உதவும் பொருட்டு பயன்படுத்துவதில் பெல்ஜியத்தின் கவலையே, இதுவரை இந்த விவகாரம் தாமதமாக காரணம்.

எச்சரிக்கை
ரஷ்யாவின் பெரும்பாலான சொத்துக்கள் பெல்ஜியத்தில் முடக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெல்ஜியத்தின் விமான நிலையங்கள், இராணுவத் தளங்கள் என மர்ம ட்ரோன் அத்துமீறல்கள் எனைத்தும், முடக்கப்பட்ட சொத்தில் தொட வேண்டாம் என்ற எச்சரிக்கையாக இருக்கலாம் என ஜேர்மனி விளக்கமளித்துள்ளது.
இருப்பினும், ஐரோப்பிய நாடுகளில் தொடர்ச்சியான ட்ரோன் அச்சுறுத்தல்களில் தங்களுக்கு தொடர்பில்லை என்றே ரஷ்யா கூறி வருகிறது.

ஏற்கனவே, ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்து இடியை இறக்கியுள்ள நிலையில், தற்போது முடக்கப்பட்டுள்ள சொத்துக்கள் விவகாரத்தில் அமெரிக்காவின் ஆதரவு என்பது, புடின் மீது ட்ரம்ப் நிர்வாகம் இறக்கும் இன்னொரு இடியாகவே பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |