சர்வதேச அரசியலில் புயலைக் கிளப்பிய ஆவணம்: அம்பலப்பட்ட உண்மைகள்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பதவியிறக்கம் குறித்த சர்ச்சையை, தூதரகத் தகவல் ஒன்று மீண்டும் கிளப்பியுள்ளது.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான்
அமெரிக்க ஆதரவுடன் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாக, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு மையமாக இருந்த அசல் ஆவணத்தை, Drop Site என்ற புலனாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் இம்ரான் கான் பதவியிறக்கப்பட்டதில் அமெரிக்காவின் பங்கு குறித்த கேள்விகளையும் மீண்டும் எழுப்பியுள்ளது.
கேபிள் I-0678 என அடையாளம் காணப்பட்ட இந்த ஆவணம், ஏப்ரல் 2022யில் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைவதற்கு சற்று முன்பு, அமெரிக்காவிற்கான அப்போதைய பாகிஸ்தான் தூதருக்கும், அமெரிக்க வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரியான டொனால்ட் லூவுக்கும் இடையே நடந்த ஒரு சந்திப்பைப் பதிவு செய்துள்ளது.
எல்லாம் மன்னிக்கப்படும்
அந்த இரகசிய சந்திப்பில் டொனால்ட் லு பயன்படுத்திய "All will be forgiven" (எல்லாம் மன்னிக்கப்படும்) என்ற வார்த்தைதான் தற்போது சர்வதேச அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
அதாவது, இம்ரான் கானை பிரதமர் பதவியில் இருந்து நீக்கினால் அமெரிக்காவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவில் இருக்கும் கசப்புகள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு, மீண்டும் நல்லுறவு தொடங்கும் என்பதே அதன் அர்த்தம் என்று கூறப்படுகிறது.
ஏனென்றால், ரஷ்யா மற்றும் சீனாவிற்கு ஆதரவாக இம்ரான் கான் எடுத்த தன்னிச்சையான வெளியுறவுக் கொள்கை அமெரிக்காவைக் கோபப்படுத்தியது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு, பாகிஸ்தானில் இராணுவ முகாம்களை அமைக்க இம்ரான் கான் இடம் தர மறுத்ததும் ஒரு காரணம் ஆகும்.
இதனால், இம்ரான் கான் அதிகாரத்தில் இருந்தால் பாகிஸ்தான் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும் என்றும் அமெரிக்கா மிரட்டியதாக அந்த ஆவணம் கூறுகிறது.
இரகசியமாக ஆயுதங்களை விநியோகம்
மேலும், இம்ரான் கானின் ஆட்சியின்போதே பாகிஸ்தானின் இராணுவ தளபதி, அவருக்கு தெரியாமலேயே அமெரிக்காவுடன் தனியாக ஒப்பந்தம் பேசத் தொடங்கினார் என்ற தகவலையும் இந்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் நீக்கப்பட்ட பின், ஷெரீப் அரசு உக்ரைன் போருக்காக அமெரிக்க ஒப்பந்ததாரர்கள் மூலமாக, இரகசியமாக ஆயுதங்களை விநியோகம் செய்யத் தொடங்கியது.

அதன் காரணமாகவே சர்வதேச நிதியத்தின் நிதியுதவிகள் பாகிஸ்தானுக்கு தடையின்றி கிடைத்தன என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அமெரிக்காவின் சதியால்தான் தனது ஆட்சி கவிழ்க்கப்பட்டது என்று இம்ரான் கான் தொடர்ச்சியாக கூறி வந்தது இந்த அறிக்கையின் வாயிலாக தெரிய வந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |