H-1B Visa மூலம் குடியுரிமை பெற தடை., அமெரிக்காவில் புதிய மசோதா
அமெரிக்க காங்கிரசில் குடியரசு கட்சியை சேர்ந்த டெக்சாஸ் மாநில எம்.பி. சிப் ராய், புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளார்.
"American White-Collar Worker Jobs Act of 2026" எனப்படும் இந்த மசோதா, H-1B விசா திட்டத்தில் பெரிய மாற்றங்களை கொண்டு வரவுள்ளது.
இந்த மசோதா, H-1B விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை (Green Card) பெறும் வழியை முற்றிலும் தடை செய்கிறது.

இதுவரை, H-1B விசா "dual intent"எனப்படும் முறையின் மூலம் வேலை செய்யும் போது க்ரீன் கார்டுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டது.
ஆனால், இந்த புதிய மசோதா, "வெளிநாட்டில் நிரந்தர முகவரி வைத்திருக்க வேண்டும், அதை விட்டுவிடக்கூடாது" என்ற நிபந்தனையை விதிக்கிறது.
இதனால், H-1B விசா மூலம் க்ரீன் கார்டு, அதாவது நிரந்தர குடியுரிமை பெறுவது சாத்தியமற்றதாகிறது. மேலும், H-1B ஊழியர்களுக்கு அதிக சம்பளம் வழங்க வேண்டும், அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அரசு தளத்தில் வெளியிட வேண்டும் என்ற கடுமையான விதிமுறைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
ஒரு நிறுவனத்தில், வெளிநாட்டு ஊழியர்கள் 5 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கக்கூடாது என்றும், H-1B விண்ணப்பம் செய்யும் முன் அதே துறையில் அமெரிக்க ஊழியர்களை நீக்கக் கூடாது என்றும் மசோதா கூறுகிறது.
H-1B விசாவின் காலவரையறை 6 ஆண்டிலிருந்து 2 ஆண்டாக குறைக்கப்படும். மேலும், லாட்டரி முறைக்கு பதிலாக சம்பள அடிப்படையில் விசா வழங்கவேண்டும்.
இந்த மாற்றம் இந்தியர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில், H-1B விசா பெறுபவர்களின் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் இந்தியர்களே.
தற்போது, 12.6 லட்சம் இந்தியர்கள் க்ரீன் கார்டுக்காக காத்திருக்கின்றனர். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அவர்களின் அமெரிக்க கனவு முற்றிலும் சிதைந்து போகும் அபாயம் உள்ளது.
ஆனால், குடியேற்றக் கொள்கையில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி இடையே கடும் பிளவு இருப்பதால், இந்த மசோதா சட்டமாகும் வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |