ஈரானை மொத்தமாக... அமெரிக்காவிற்கு இரண்டு வாரங்கள் போதும்: சீறிய ட்ரம்ப்
ஈரானின் ஒவ்வொரு இலக்கையும் மொத்தமாக அழிக்க, அமெரிக்காவிற்கு வெறும் இரண்டு வாரங்கள் போதும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெறும் ஒரு காகிதப் புலி
ஈரான் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட நாடு என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். நேட்டோ அமைப்பானது வெறும் ஒரு காகிதப் புலி என குறிப்பிட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிராக நேச நாடுகள் எதுவும் உதவ முன்வரவில்லை என்றும் கொந்தளித்துள்ளார்.

ஆனால், இஸ்ரேலின் அழுத்தம் காரணமாக ஈரான் மீது போர் தொடுக்கும் முன்னர் அமெரிக்கா தங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என்றே பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி உட்பட பல நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
மட்டுமின்றி, இது இஸ்ரேல் தனது பகை தீர்க்க அமெரிக்காவுடன் நடத்தும் போர் என்றும், தங்களுக்கு இதில் பங்கில்லை என்றும் பல நாடுகள் பதிலளித்திருந்தன.
தனியார் செய்தி ஊடகம் ஒன்றில் கடந்த வாரம் பதிவு செய்யப்பட்ட அந்த நேர்காணலானது ஞாயிறன்று நேரலை செய்யப்பட்டது.

மொத்தமாக முடித்து விட்டதாக
பிப்ரவரி 28 அன்று ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுடன் தொடங்கிய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த அமெரிக்காவின் சமீபத்திய நிபந்தனைகளுக்கு ஈரான் பதிலளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே ட்ரம்பின் கருத்து வெளியாகியுள்ளது.
அவர்கள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். ஒருவேளை, அவர்கள் மனதளவில் அதை அறியாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் அதை அறிந்திருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன் என்று அந்தப் பேட்டியில் ட்ரம்ப் கூறியிருந்தார்.

ஆனால், அவர்களை மொத்தமாக முடித்து விட்டதாக இதற்கு பொருளல்ல என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாங்கள் அடைய விரும்பிய சில இலக்குகள் இருந்தன, அவற்றில் ஏறத்தாழ 70 சதவிகிதத்தை நாங்கள் அடைந்துவிட்டோம்.
ஆனால், எங்களால் அடையக்கூடிய சாத்தியமுள்ள வேறு இலக்குகளும் எங்களிடம் உள்ளன என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |