காபூலிலிருந்து காலியாக புறப்படும் விமானங்கள்! விமான நிலையத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கும் தாலிபான்கள்
தாலிபான்கள் காபூல் விமான நிலையத்திற்குள் மக்களை நுழையவிடாமல் தடுத்து வருவதால், மிகக்குறைந்த பயணிகளை மட்டுமே ஏற்றிக்கொண்டு பல நாடுகளின் விமானங்கள் புறப்பட்டு செல்கின்றன.
அமெரிக்காவின் C-17 எனும் சரக்கு விமானத்தின் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஒரே பயணத்தில் 640 பேரை சுமந்துகொண்டு செல்லமுடிந்தது.
ஆனால் நேற்றிரவு, காபூலில் இருந்து பதினெட்டு C-17 சரக்கு விமானங்கள் புறப்பட்டபோதிலும், மொத்தமாக 2,000 பேர் மட்டுமே அந்த விமானங்களின் மூலம் அமெரிக்கா சென்றடைந்தனர். அதாவது தோராயமாக ஒரு விமானத்தில் வெறும் 110 பேர் மட்டுமே சென்றுள்ளனர்.
இதற்கு மிக முக்கிய காரணம், தாலிபான்கள் விமான நிலைய நுழைவாயில்களை கட்டுப்படுத்தி, மக்களை உள்ளே நுழைய விடாமல் துப்பாக்கிச்சுடு தாக்குதல் நடத்தி அச்சுறுத்தி வருகின்றனர்.
சுமார் 50,000 பேர் விமான நிலைய நுழைவாயில்களுக்கு வெளியே இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் வெளிநாட்டவர்களும் உள்ளே நுழைய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஒரு நாளைக்கு குறைந்தது 9,000 பேர் என இரண்டே நாட்களில் மொத்த 20,000 ஆப்கான் மக்களை அழைத்துச்சென்று, இந்த ஆண்டு ஆதரவு அளிப்பதாக அமெரிக்கா உறுதியளித்தது. ஆனால் நேற்று ஒரே நாளில், அதில் வெறும் 10 சதவீத மக்களை மட்டுமே ஏற்றிச்செல்ல முடிந்தது.
அதேபோல், ஒரு அதிர்ச்சியூட்டும் விதமாக, 150 பேருக்கு இடமளிக்கும் Airbus A-400M ரக ஜேர்மன் விமானம் செவ்வாய்க்கிழமை காபூலில் இருந்து வெறும் 7 பேருடன் புறப்பட்டது.
இதற்கிடையில், இந்த ஆண்டு மொத்தம் 7,000 பேரை அழைத்துச் செல்வதாக உறுதியளித்தள்ள பிரித்தானியா, இதுவரை 1,000 பேரை மீட்டுள்ளது.
அதேபோல், 120 பேருக்கு இடமளிக்கக்கூடிய அவுஸ்திரேலியாவின் ஹெர்குலஸ் சி -130 விமானம் புதன்கிழமை வெறும் 26 பேருடன் புறப்பட்டது.
நெதர்லாந்தின் 120 இருக்கைகள் கொண்ட Boeing C-17 விமானம் செவ்வாய்கிழமை வெறும் 40 பேருடன் நாடு திரும்பியது.
அதேபோல, பிரான்சிலிருந்து வந்த Airbus A400M விமானத்தில் 150 பேர் பயணிக்கும் அளவிற்கு வசதி இருந்தபோதிலும் வெறும் 41 பேரை மட்டுமே நாடு திரும்ப முடிந்தது.
இது போல் பல நாடுகளின் விமானங்கள் காலியாகவே சென்றுகொண்டு இருக்கின்றன. பல மேற்கத்திய நாடுகள் மொத்தம் 1,00,000 மக்களை இந்த ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



