முற்றுகையைக் கடக்க முயற்சி... ஈரானியக் கப்பல் ஒன்றை அதிரடியாகக் கைப்பற்றிய அமெரிக்கா
ஹார்முஸ் நீரிணைக்கு அருகே கடற்படை முற்றுகையை மீறிச் செல்ல முயன்ற ஈரான் சரக்குக் கப்பல் ஒன்றை, அமெரிக்கா வலுக்கட்டாயமாகப் பறிமுதல் செய்ததாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடற்படையின் கட்டுப்பாட்டில்
ஓமான் வளைகுடாவில் உள்ள அமெரிக்க கடற்படையின் கப்பல் ஒன்று, அந்த கப்பலை நிறுத்துமாறு எச்சரித்ததாகவும், ஆனால் அது நிறுத்தவில்லை என்றும் ட்ரம்ப் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

தமது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், நமது கடற்படைக் கப்பல் இயந்திர அறையில் ஒரு துளையை ஏற்படுத்தி, அவர்களை இருந்த இடத்திலேயே தடுத்து நிறுத்தியது என்றார்.
MOMENT American ship ATTACKS Iranian vessel Touska https://t.co/ykbQGIYTVj pic.twitter.com/jBlsT4zFl4
— RT (@RT_com) April 19, 2026
Touska என்ற அந்த சரக்குக் கப்பல் தற்போது அமெரிக்க கடற்படையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், சோதனை முன்னெடுக்கப்படுவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கைப்பற்றல், நீரிணையில் போக்குவரத்து தொடர்பாக ஈரானுடன் நிலவி வரும் இழுபறியை மேலும் தீவிரப்படுத்துவதோடு, நிலையற்ற போர்நிறுத்தம் இன்னும் சில நாட்களில் முடிவடையவுள்ள நிலையில், ஈரானுடன் இரண்டாவது சுற்று நேரடிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராகி வரும் வேளையில் நிகழ்ந்துள்ளது.
இந்த விவகாரத்தில் ஈரானின் அடுத்த நகர்வு என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை. மேலும், அமெரிக்காவின் முற்றுகை நீடிக்கும் வரையில், பேச்சுவார்த்தை என்பது சாத்தியமல்ல என்றே ஈரான் தெரிவித்துள்ளது.

இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை
ஆனால், திங்களன்று பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை உறுதி என்றே அமெரிக்கா தரப்பு அறிவித்துள்ளது. மேலும், புதன்கிழமைக்குள் காலாவதியாகவிருக்கும் போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான நம்பிக்கையை ட்ரம்பின் முடிவு ஏற்படுத்தியிருந்தது,
அதேவேளையில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஹார்முஸ் நீரிணை தொடர்பாக முட்டுக்கட்டை நீடிக்கிறது. ஈரானுடனான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை எப்போது என பாகிஸ்தானும் இதுவரை உறுதி செய்யாத நிலையில், அமெரிக்கா முந்திக்கொண்டு தங்கள் குழுவை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது.

ஆனால், மத்தியஸ்தர்கள் ஏற்பாடுகளை இறுதி செய்து வருவதாகவும், அமெரிக்காவின் முன்கூட்டிய பாதுகாப்புக் குழுக்கள் தற்போது களமிறக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தானில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
கடந்த வார இறுதியில் 21 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற, வரலாற்றுச் சிறப்புமிக்க நேரடிப் பேச்சுவார்த்தைகளின் முதல் சுற்றுக்குத் தலைமை தாங்கிய துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோருடன் இணைந்து பாகிஸ்தானுக்கான அமெரிக்கக் குழுவை வழிநடத்துவார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
தற்போது கப்பல் ஒன்றை அமெரிக்க கடற்படைக் கைப்பற்றியுள்ள நிலையில், பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |