ஈரான் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா - மீண்டும் போர் வெடிக்குமா?
பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை
கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது.

மேலும், உலகின் முக்கிய எரிபொருள் விநியோக பாதையான ஹார்முஸ் நீரிணையை மூடியது. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து பல்வேறு நாடுகள் சிக்கலை எதிர்கொண்டுள்ளன.
இந்நிலையில், 6 வார போருக்கு பின்னர், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தின் கீழ் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்தன.
ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும், முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க வேண்டும், ஹார்முஸ் மீதான கட்டுப்பாட்டை அங்கீகரிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை ஈரான் முன்வைத்துள்ளது.
ஈரான் அணுசக்தி தயாரிப்பை கைவிட வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக அமெரிக்கா முன்வைத்துள்ளது.
இரு நாடுகளுக்குமிடையே கத்தாரில் வைத்து பல்வேறு கட்ட ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வரும் சூழலில் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
தெற்கு ஈரானில் உள்ள முக்கிய கடற்படை தளமான பாந்தர் அப்பாஸ் மீதும், ஹார்முஸ் அருகே உள்ள ஈரானிய கடற்படை படகுகள் மீதும் அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில், ஈரானின் ஏவுகணை தளங்கள் மற்றும் கண்ணிவெடி புதைக்க முயன்ற 3 படகுகளை அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) தெரிவித்துள்ளது.
மேலும், இந்தப் புதிய தாக்குதல்கள் தற்காப்புக்காகவும், ஈரானியப் படைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து நமது துருப்புக்களைப் பாதுகாப்பதற்காகவும் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஈரான் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில் ஈரான் மீதான தாக்குதலின் மூலம் மீண்டும் போர் வெடிக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |