H4 பணி அனுமதியை ரத்து செய்ய அமெரிக்கா திட்டம் - இந்தியர்களுக்கே அதிக பாதிப்பு
us plans to end H4 work permit it will affect indians: அமெரிக்காவில் H1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கைதுணை வேலை செய்ய அனுமதி அளிக்கும் H4 பணி அனுமதியை ரத்து செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
H4 பணி அனுமதியை ரத்து செய்ய அமெரிக்கா திட்டம்
அமெரிக்காவில் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் நோக்கில், டிரம்ப் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முன்னதாக அமெரிக்காவில் பணியாற்றுவதற்கான H1B விசாவிற்கான கட்டணத்தை ரூ.1.9 லட்சத்தில் இருந்து ரூ.88 லட்சமாக உயர்த்தினார். இதற்கு சில நீதிமன்றங்கள் தடை விதித்த நிலையில், இது தொடர்பான மேல்முறையீடு வழக்கு நடைபெற்று வருகிறது.
தற்போது H1B விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கை துணையினர் அமெரிக்காவில் வேலை செய்வதற்கான H4 பணி அனுமதியை ரத்து செய்யும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது.
H1B விசா வைத்திருப்பவர்களின் கணவன் அல்லது மனைவிக்கு H-4 விசா அமெரிக்கா வழங்கி வருகிறது.

H-4 தகுதியானது, குடும்ப உறுப்பினர்கள் H-1B வைத்திருப்பவருடன் சென்று அமெரிக்காவில் வசிக்க அனுமதிக்கிறது. ஆனால் வேலைவாய்ப்பு உரிமைகளை வழங்குவதில்லை.
2015 ஆம் ஆண்டில் புதிய விதிகள் மூலம், H-4 விசா வைத்திருப்பவர்கள் வேலை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது வேலைவாய்ப்பு அங்கீகாரத்திற்குத் தகுதியுள்ள வெளிநாட்டினர் பிரிவிலிருந்து H-4 சார்ந்த வாழ்க்கைத் துணைவர்களை நீக்குதல்" என்ற தலைப்பிலான முன்மொழிவை அமெரிக்கா உள்நாட்டு பாதுகாப்பு துறை பட்டியலிட்டுள்ளது.
இந்த முன்மொழிவு சட்டமாக மாறி நடைமுறைக்கு வரும் போது, அது அமெரிக்காவில் உள்ள இந்தியர்களையே அதிகளவில் பாதிக்கும்.
2014 முதல் 2017 வரையிலான தரவுகளின்படி, H-4 வேலை அனுமதி 93% இந்தியக் குடிமக்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. அந்த அனுமதி பெற்றவர்களில் 94% பேர் பெண்கள் ஆவர்.
இந்த முன்மொழிவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு மக்களின் கருத்துக்களை பெற்ற பிறகே இறுதி முடிவு எடுக்கப்பட்டு சட்டமாக அமுலுக்கு வரும். அதுவரை H 4 வேலை அனுமதி பெற்றுள்ளவர்களுக்கு பாதிப்பில்லை.
இருப்பினும் அமெரிக்காவில் கணவர் மற்றும் மனைவி இருவரின் வருமானத்தையும் சார்ந்துள்ள குடும்பத்தினருக்கு இந்த முன்மொழிவு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |